Published : 28 Jun 2020 07:30 PM
Last Updated : 28 Jun 2020 07:30 PM

அரசு மருத்துவமனைக்கு தாமதமாக ‘கரோனா’ நோயாளிகளை பரிந்துரை செய்யக்கூடாது: தனியார் மருத்துவமனைகளுக்கு ‘கரோனா’ தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை 

மதுரை

அரசு மருத்துவமனைக்கு தாமதமாக ‘கரோனா’ நோயாளிகளை பரிந்துரை செய்யக்கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு ‘கரோனா’ தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக டாக்டர் சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மதுரையில் தங்கியிருந்து மாவட்டத்தில் ‘கரோனா’வை தடுப்பு குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நேற்று மாலை அவர் சென்னை சென்றுவிட்டநிலையில் இன்று மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சைகள் மேற்கொள்வது குறித்து இணைய வழியில் ஆலோசனை வழங்கினார். ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கலந்து கொண்டனர்.

இதில், மாவட்ட ‘கரோனா’ தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் சந்திரமோகன் பேசியதாவது;

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கரோனா காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக புறநோயாளிகள் பகுதி அமைக்கப்பட்டு பரிசோதனை செய்து தனியாக சிகிச்சை வழங்க வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கூடுதலான படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது மருத்துவமனையின் முன்புறம் தனியாக வாஷ்பேசின், ஹேண்ட் சானிடைசர் வசதி தேவையான அளவு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். கிருமி நாசினி மருந்து தினந்தோறும் தொடர்ந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு காலதாமதமாக நோயாளிகளை பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் விவரங்களை ஒவ்வொரு நாளும் தெரிவிக்க வேண்டும். படுக்கை வசதிகளின் எண்ணிக்கையும், வசதிகளையும் தினந்தோறும் சிகிச்சைக்கு வருபவர்களின் விவரங்களையும் கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் 125 தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x