

போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் இறந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்த போது, சாத்தான்குளம் போலீஸார் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் இருவரும் சிறையில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். மேலும், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் தந்தை, மகன் சாவுக்கு காரணமான போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயிர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிறையில் ஆய்வு:
அதன் அடிப்படையில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் ஆகியோர் நேற்று காலை முதல் மாலை வரை கோவில்பட்டி கிளை சிறையில் ஆய்வு நடத்தினர். அப்போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டதற்கான ஆவணங்கள், அப்போது பதிவு செய்யப்பட்ட குறிப்புகள், மருத்துவ அறிக்கை போன்றவற்றை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்படும் போதே அவர்களது உடலில் சில காயங்கள் இருந்ததாக சிறையில் உள்ள குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.
காவல் நிலையத்தில் விசாரணை:
இந்நிலையில், மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் ஆகியோர் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினர். கடந்த 19-ம் தேதி இரவு காவல் நிலையத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அங்கு பணியில் இருந்த போலீஸாரிடம் விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் பார்வையிட்டு பதிவு செய்து கொண்டனர். மேலும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை போன்றவற்றை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து நீதிபதிகள் சாத்தான்குளத்திலேயே முகாமிட்டு, அரசு மருத்துவமனை மற்றும் ஜெயராஜின் வீட்டுக்கு சென்று நேரில் விசாரணை நடத்தவும், இந்த சம்பவம் தொடர்பாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். எனவே, விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை அடிப்படையில் நாளை (ஜூன் 30) மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது