

சாத்தான்குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவர் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே முதல்வர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர் என அறிவிப்பதும், அமைச்சர் லாக்-அப் மரணம் குறித்து விளக்கம் கொடுப்பதையும் பார்க்கும்போது இந்த அரசில் நீதி கிடைக்காது என தெரிகிறது என கனிமொழி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னார் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ லாக் அப் மரணம் என்பது காவல்நிலையத்திலேயே தாக்கப்பட்டு அங்கேயே உயிரிழந்ததால் தான் அதற்கு லாப் மரணம் என்று பெயர்.
ஆனால் தற்போது நடந்த சம்பவம் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, அங்கிருந்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2, 3 நாட்களுக்கு பின்னர் சம்பவம் நடந்துள்ளது.
இதனை கனிமொழி லாக் அப் மரணம் என கூறியுள்ளார். அரசியலுக்காக இதனை அவர் சொல்கிறார். எதிர்கட்சிகள் அப்படி செய்தாலும் மக்களுக்கு உண்மை தெரியும்”. எனத் தெரிவித்திருந்தார். இதற்கு கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் வைத்துள்ளார்
அவரது ட்விட்டர் பதிவு:
“சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார்.
இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது”.
என பதிவிட்டுள்ளார்.