Published : 28 Jun 2020 16:25 pm

Updated : 28 Jun 2020 16:25 pm

 

Published : 28 Jun 2020 04:25 PM
Last Updated : 28 Jun 2020 04:25 PM

மோசமான சூழலில் புதுச்சேரி- முதல்வர்  நாராயணசாமி செயல்பாட்டை விமர்சித்து குற்றம்சாட்டி எதிர்க்கும் திமுக, அதிமுக

dmk-admk-puducherry-cm-narayanasamy

புதுச்சேரி

கரோனா சூழலில் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் செயல்பாட்டை விமர்சித்தும் திமுக, அதிமுக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

புதுச்சேரியில் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.அரசு துறைகள் செயல்பாட்டில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வைரஸ் தொற்றுள்ள இக்காலத்திலும் போராட்ட களமாகியுள்ளது புதுச்சேரி. இச்சூழலில் முதல்வர் நாராயணசாமியின் செயல்பாட்டை கூட்டணிக்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் கடுமையாக விமர்சித்துள்ளன.

தொடர்ந்து மக்கள் ஏமாற்றப்படுவதை பொறுத்து கொள்ள மாட்டோம்

முதல்வர் நாராயணசாமிக்கு திமுக எம்.எல்.ஏ., சிவா எச்சரிக்கை

புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்போதைய கரோனா கால கட்ட சூழ்நிலை மற்றும் நிதிநிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் எப்போதும்போல் நிறைய செய்வதாக சொல்லி செய்யாமல் இருப்பதை காட்டிலும், சரியான நேரத்தில் சரியானதை செய்தோம் என்ற பெயரை பெறுவதற்கான கடமையும் முதல்வருக்கு உள்ளது.

முதலில் வேலை இழந்து, சம்பளமில்லாத அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும். ஆளுனரே அரிசி வழங்க உத்தரவிட்டுவிட்டதால் ரேஷன் கடைகள் மூலம் அரிசியை மட்டுமே தருவேன் என்ற உத்திரவாதம் தர வேண்டும். அதை இந்த மாதத்திலேயே தொடங்கி இந்த ஆட்சிக்காலம் முழுவதும் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் தலா 30 கிலோ இலவச அரிசியை வழங்க வேண்டும்.

தொடர் ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் உடனடியாக மீண்டும் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். நகராட்சி ஊழியர்களுக்கு தடையின்றி சம்பளம் கிடைக்க உரிய மானியத்தையும் அரசு வழங்க வேண்டும். அனைத்து விதமான வேலையில்லா தொழிலாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மாநில அரசின் மூலமும் விவசாயிகளுக்கான திட்டங்களை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும். பாசிக் நிறுவனத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து உரம், பூச்சி கொல்லி, விதை உள்ளிட்டவைகள் விவசாயிகளுக்கு கிடைக்க வழிகாண வேண்டும். கால்நடைகளுக்கு மானிய விலையில் தீவனம் கிடைக்க வழிகாண வேண்டும். தரமான மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இதுவரை உங்களது ஆட்சியில் சொன்னதை செய்யாவிட்டாலும் நிதி சுமை மற்றும் ஆளுநர் தலையீட்டை காரணம் காட்டியதை ஏற்று ஆதரவு அளித்து வந்தோம். ஆனால் இனிமேலும் இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மக்கள் போராட்டங்களை மேற்கொள்வர். அந்த போராட்டங்கள் அனைத்திற்கும் திமுக தலைமை தாங்கும். தொடர்ந்து மாநில மக்கள் வஞ்சிக்கப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் ஒருபோதும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்று நேரடியாக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்துள்ளார். .

முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததால் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார்

முதல்வர் மீது அதிமுக இணைசெயலாளர் ராமதாஸ் குற்றச்சாட்டு

புதுச்சேரி அதிமுக இணை செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆண்டுதோறும் மாநிலத்திற்கான முழு பட்ஜெட்டினை சமர்ப்பிக்க வேண்டியது அதன் அரசியல் அமைப்பு கடமை ஆகும். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்து பட்ஜெட்டின் முக்கியத்துவத்தை கெடுத்து தனது கடமையில் இருந்து புதுச்சேரி அரசு தவறி உள்ளது..

கடந்த பிப்ரவரி மாதமே மத்திய அரசு புதுச்சேரிக்குரிய நிதி உதவியையும், மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியையும் அறிவித்துவிட்டது. அடுத்த ஒரு மாதத்தில் வரவு - செலவு கணக்கை மதிப்பிட்டு மார்ச் 20-ம் தேதியே மத்திய அரசின் ஒப்புதலோடு சட்டமன்றத்தில் முழு பட்ஜெட்டை சமர்ப்பித்து இருக்கலாம். ஆனால் பொறுப்பற்றத்தனமாக இந்த வாய்ப்பை அரசு நழுவ விட்டு விட்டது.

மார்ச் மாதத்தில் சமர்ப்பித்திருந்தால் பட்ஜெட்டின் அளவு ரூ.9,500 கோடியாக இருந்திருக்கலாம். அப்போது கரோனாவால் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் அரசின் சொந்த வருவாய், கடன் வாங்கும் அளவு, செலவினம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக கணித்து இருக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டு புதுச்சேரியின் பொருளாதாரத்தை சீரழித்ததற்கு முதல்வர் நாராயணசாமிதான் காரணம்.

முதல்-அமைச்சருக்கு மாநில தலைவிதியை நிர்ணயிக்கும் திட்டக்குழு கூட்டத்தை கூட்ட நேரம் இல்லையா? அல்லது கவர்னரை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லையா? மாநில திட்டக்குழுவின் பரிந்துரை இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படலாம்.

திட்டக்குழுவை கூட்டி பட்ஜெட் வேலைகளை நேரத்தோடு முடிவு செய்யாமல் கடைசி நேரத்தில் மத்திய அரசுக்கு அனுப்புவது இந்த அரசுக்கு மாநிலத்தின் மீதும் மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் அக்கறை இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. அவசர கதியில் ஒரு பட்ஜெட்டை சமர்ப்பித்து உரிய விவாதம் இல்லாமல் சட்டமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தால் அந்த பட்ஜெட்டால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

DMKADMKPuducherryCM Narayanasamy

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author