Last Updated : 28 Jun, 2020 02:08 PM

 

Published : 28 Jun 2020 02:08 PM
Last Updated : 28 Jun 2020 02:08 PM

பொதுமுடக்கத்தால் மீண்டும் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்! நமது உடமைகளைப் பாதுகாக்க செய்ய வேண்டியவை என்ன?

கரோனா அச்சம் மற்றும் பொதுமுடக்கம் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதாலும், காவலர்களின் வழக்கமான ரோந்துப் பணி குறைந்திருப்பதாலும் தென்மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் நம்முடைய உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன என்று காவல் துறை முன்னாள் ஐஜி-யான கண்ணப்பன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதும், குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைந்தன. ஆட்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்ததால் திருட்டு மற்றும் வழிப்பறிச் சம்பவங்கள் நின்று போயின. விபத்துக்களும், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளும் கூட குறைந்து போனது. கொலைகளின் எண்ணிக்கைகளும் கூட வழக்கத்தைவிட குறைந்தன. டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இப்போது நிலைமை மாறிவிட்டது. மீண்டும் குற்றச் செயல்களும், திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களும் நடைபெறத் தொடங்கிவிட்டன. தென் மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களை விசாரித்த போலீஸார், அதில் புதிய குற்றவாளிகளும் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் ஒரு திருட்டுக் காரைப் பிடித்த போலீஸார், அந்த கும்பலிடம் இருந்து 21 கார்களை மீட்டனர்.

மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார், ஒரு பாதிரியாரை கைது செய்து அவரிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். நகை பறிப்புச் சம்வங்களும் அதிகரித்திருக்கின்றன. ஒத்தக்கடையில் பட்டப்பகலில் மெயின் ரோட்டிலேயே நகை பறித்துச் சென்றார்கள் சில இளைஞர்கள்.

வழக்கமாக, "முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள்" என்று ஒலிபெருக்கியில் எச்சரித்துவந்த போலீஸார் இப்போது, "பொருட்கள் ஜாக்கிரதை, அதிக நகையணிந்து வெளியே செல்ல வேண்டாம், உங்களது வாகனங்களில் விலை உயர்ந்த பொருட்களை விட்டுச் செல்லாதீர்கள்" என்று எச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதுரை ஒத்தக்கடை போலீஸார் ஒரு படி மேலே சென்று, "ஊரடங்கால் வேலையிழப்பு, வருமான இழப்பு காரணமாக பழைய குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயலில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய குற்றவாளிகளும் உருவாகியிருக்கக் கூடும். எனவே, காலை 6 மணிக்கு முன்பு வாக்கிங் செல்வதையும், இரவு 8 மணிக்கு மேல் வீதியில் நடமாடுவதையும் தவிருங்கள். ஆள் நடமாட்டமில்லாத குறுக்குப் பாதைகளில் செல்ல வேண்டாம்" என்று மைக்கில் எச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இன்னொருபுறம், "கரோனா பரவல் அதிகரித்திருப்பதால், மிக அவசிய வழக்குகளைத் தவிர மற்ற வேலைகளுக்கு போலீஸார் அதிக முக்கியத்துவம் தர வேண்டாம்" என்று காவவ்துறை உயர் அதிகாரிகள் போலீஸாருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நேரத்தில், பொதுமக்கள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? என்று காவல் துறையின் முன்னாள் போலீஸ் ஐஜி-யான கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

குற்றங்கள் நடப்பதற்கு பல காரணங்கள் உண்டு. இப்போது குறிப்பாக இரவு நேரத்தில் தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் மிகமிக குறைவாக, அல்லது சுத்தமாக ஆள் நடமாட்டமே இருப்பதில்லை. அதேபோல அந்த மாதிரியான தெருக்களில் காவல்துறை ரோந்து செல்வதற்கான வாய்ப்பும் இப்போது குறைவு. இதனால் குற்றவாளிகள் வந்து குற்றங்களைச் செய்துவிட்டுத் தப்பிப் போவதற்கு வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

வருமானம் குறைந்ததால் திருட்டுச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது இரண்டாவது காரணம்தான். ரோந்தை அதிகரிப்பதையும், சந்தேகத்திற்கிடமானவர்களை விசாரிப்பதையும், காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமிராக்கள் வாயிலாக அன்னியர் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணிப்பதையும், பழங்குற்றவாளிகள் வீட்டில் இருக்கிறார்களா என்று விசாரிப்பதையும் இந்த நேரத்தில் காவல்துறையினர் அதிகரிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புவது, மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லாத் தெருவிலும் போலீஸாரை நிறுத்த முடியாது என்பதால், ஒவ்வொரு தெருவிலும் தனியார் செக்யூரிட்டிகளைப் பணியமர்த்தலாம். அல்லது காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டு, அந்தந்த தெரு இளைஞர்களே சுழற்சி முறையில் இரவு காவல்ப்பணி (கம்யூனிட்டி போலீஸ்) புரியலாம். சந்தேகப்படும்படியாக யாராவது நடமாடினால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.

சிசிடிவி இல்லாத தெருக்களில், அந்தத் தெருவில் குடியிருப்போரே ஒன்று சேர்ந்து சிசிடிவி கேமிராவை வாங்கி தெருமுனையில் பொறுத்தலாம். இதெல்லாம் குற்றச்செயல்களைத் தடுக்க நிரந்தரமான தீர்வாகவும் அமையும்.
இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x