

சென்னையில் கரோனா தொற்றை ஒட்டி தளர்வு இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்துள்ள நிலையில் சென்னைக்குள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட சிக்கன், மீன் உள்ளிட்டவற்றை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு தளர்வு இன்றி அமல்படுத்தப்படுகிறது. இன்று மருத்துவ சேவை தவிர எதற்கும் அனுமதி இல்லை என போலீஸார் அறிவித்திருந்தனர். இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை முழுவதும் வருவாய்த் துறையினர், போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் வருவாய்த் துறை அதிகாரிகள், போலீஸார் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 5.10 மணி அளவில் மாட்டுத் தீவனம் என்று ஒட்டப்பட்டு வந்த ஆட்டோவை மடக்கிச் சோதனை செய்தனர்.
அப்போது ஆட்டோவில் புதுப்பேட்டையில் இருந்து வடபழனிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 300 கிலோ கோழிக் கறியும் 100 கிலோ மீனும் இருந்தன. வருவாய்த் துறை மற்றும் போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று சென்னையில் பெரும்பாலான இடங்களில் போலீஸாருக்குத் தெரியாமல் கள்ளச்சந்தையில் கோழி, மீன்கள் விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட இறைச்சியை இடுகாட்டில் பள்ளம் தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் புதைத்தனர்.