வெளிமாவட்ட வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்

வெளிமாவட்ட வாகனங்களை அனுமதிக்க லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம்
Updated on
1 min read

சோதனைச்சாவடியில் பணம் பெற்றுக் கொண்டு வெளிமாவட்ட வாகனங்களை அனுமதித்த காவலரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்க நாமக்கல் மாவட்ட எல்லையில் 18 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையான வளையப்பட்டி அருகே எம். மேட்டுப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர் அவ்வழியாக வரும் வெளிமாவட்டத்தினரை சோதனை செய்யாமல் பணம் பெற்றுக் கொண்டு நாமக்கல் மாவட்டத்துக்குள் அனுமதிப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நடத்திய விசாரணையில் புகார் உண்மையென தெரிந்தது. இதையடுத்து அங்கு பணிபுரிந்த ஆயுதப்படை காவலர் பிரபுதேவா (30) என்பவரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in