

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு தொடர்பாக, அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கோவையில் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
ஆட்சியர் பேசியதாவது:
கோவை மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கைகளால் மே மாதம் இறுதி வரை பெரிய அளவுக்கு கரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில், வெளி மாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் மூலம் கரோனா தொற்று பரவியது. ரயில், விமானச் சேவைகள் தற்போது இல்லாத நிலையில் வெளியூரிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏற்கெனவே கோவை வந்தவர்கள், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோவை மாவட்டத்தில் ஆர்.ஜி.புதூர், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஒண்டிப்புதூர், ஆர்.எஸ்.புரம் சித்திவிநாயகர் கோயில் வீதி, செல்வபுரம்-சண்முகநாதபுரம், கே.கே.புதூர் உள்ளிட்ட 7 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் காவல், வருவாய், உள்ளாட்சி, சுகாதாரத் துறைகள் மூலம் தொடர் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அப்பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநகரில் 20 பறக்கும் படை அலுவலர்கள் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசின் அறிவுரைகளைக் கடைப்பிடிக்காத 24 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றாததால் 31 கடைகள் மூடப்பட்டுள்ளன. சரியாக கிருமிநாசினி தெளிக்காததாலும், தூய்மையாகப் பராமரிக்காததாலும் 5 தனியார் மருத்துவமனைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து ரூ.19.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள், சிறுகூடங்களில் முறையான அனுமதியின்றி கூட்டங்கள், விருந்துகள், நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் விவரங்களை முறையாக பராமரித்து, சளி காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெறுவோரின் விவரத்தை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.