

தமிழகம் முழுவதும் இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வருபவர்களை மாவட்ட எல்லைகளில் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 91 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்ததாக 6 லட்சத்து 82 ஆயிரத்து 385 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 லட்சத்து 44 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 5 லட்சத்து 55 ஆயிரத்து 806 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 கோடியே 65 லட்சத்து 25 ஆயிரத்து 485 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை உட்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில்அந்தந்த மாவட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீவிர நடவடிக்கைஎடுக்கும்படி காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போலீஸார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சாலைகளில் மாவட்ட எல்லைகளில் போலீஸார் நின்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களாக எந்தவிதத் தளர்வும் இல்லாமல் இ-பாஸ்இல்லாத அனைவரையும் வாகனங்களுடன் திருப்பி அனுப்பி வருகின்றனர். எதிர்த்துப் பேசுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்கின்றனர்.
சென்னையில் ஊரடங்கால் இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாறு கண்ணகி நகரில் இளைஞர் ஒருவர், உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் சீருடையை அணிந்து, கோழிக் கறியை வீடுவீடாகச் சென்று விற்பனை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸார் அவரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் சரவணன் (29) என்பதும், அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.