Last Updated : 27 Jun, 2020 10:47 PM

 

Published : 27 Jun 2020 10:47 PM
Last Updated : 27 Jun 2020 10:47 PM

‘இந்து தமிழ் திசை’நடத்திய ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ இணைய வழி சந்திப்பு; மத்திய – மாநில அரசுகளின் உதவியோடு சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்கலாம்: தொழில்துறை வல்லுநர்கள் நம்பிக்கை 

சென்னை

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறு தொழில்களை மத்திய – மாநில அரசுகளின் உதவியோடு மீட்டெடுக்க முடியும் என்று தொழில்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கரோனா தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சிறு மற்றும் குறு தொழிலை மீட்டெடுப்போம்’ (MSME ) எனும் இணைய வழி சந்திப்பு நிகழ்ச்சியை இன்று நடத்தியது. இந்தச் சந்திப்பு நிகழ்வு சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள், வங்கியாளர்கள், MSME உறுப்பினர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான இணைய வழி சந்திப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மதுரை நேட்டிவ்லீட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் பேசியதாவது:

“கோவிட் வைரஸ் -19 சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் யாராலும் அனுமானிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்போதைய சூழல், இன்றைக்குள்ள வாய்ப்புகள் இவற்றின் அடிப்படையில்தான் இந்தப் பிரச்சினைக்கான தீர்வினைத் தேட முடியும். போர் போன்ற செயற்கை பேரிடர் காலத்தோடும், புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலத்தோடும் ஒப்பிடும்போது, இந்த கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது.

இத்தகைய பொருளாதார இழப்பிலிருந்து சிறு மற்றும் குறு தொழில்களை மீட்டெடுக்க அரசுகள், வங்கிகள், பெரிய நிறுவனங்கள் கைகொடுத்து உதவ வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. சமூகம் சார்ந்த, தனிநபர் சார்ந்த மனரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. நாம் அறியாமலேயே ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து மேலெழுந்து வர வேண்டும். அரசுகள், தொழில் கூட்டமைப்புகள் மறுசீரமைப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகளையும் புதிய வாய்ப்புகளையும் நன்கு ஆராய்ந்து, அதிகமான மன பலத்துடன் செயல்பட்டால் இந்த நெருக்கடியான நிலையிலிருந்து நம்மால் மீள முடியும்” என்றார்.

தமிழ்நாடு வர்த்தக சபையின் மூத்த தலைவர் எஸ்.ரத்தினவேலு பேசியதாவது:

“கரோனாவினால் உண்டான பாதிப்புகளைப் பற்றி நாம் பேசுவதற்கு முன்னால், இதற்கு முந்தைய கால நிலைகளைப் பற்றியும் சற்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 2015 ஆம் ஆண்டில் நம் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாகக் குறைந்து, 2019 இல் 5 சதவீதமாகி, தற்போது 4.2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இந்திய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள குறு தொழில் செய்வோர் எண்ணிக்கை 6.33 கோடியாக உள்ளது. சிறு தொழில் செய்வோர் 25 இலட்சம் பேர். நடுத்தர தொழில்களை 5 ஆயிரம் பேர் செய்கிறார்கள்.

குறு தொழில்களை நாம் உடனடியாக மீட்டெடுக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இந்தத் தொழில்கள் அரசு மற்றும் வங்கிகளின் உதவியில்லாமல் 60 சதவீதம் பேர்களால் சுயதொழிலாகச் செய்யப்பட்டு வருபவை. ஏற்கெனவே பண மதிப்பிழப்பு, மதிப்புக்கூட்டு வரி ஆகியவற்றால் பாதிப்படைந்துள்ள இந்தக் குறு தொழில்கள் கரோனாவால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால் 20 முதல் 30 சதவீதம் குறு தொழில்கள் காணாமல் போய்விடும். இந்நிலையை மாற மத்திய-மாநில அரசுகள் வங்கிகள் மூலமாக குறைந்த வட்டிக்கு கடனுதவி செய்தால், நசிந்துகொண்டிருக்கும் குறு தொழில்கள் எழுந்து, மீண்டும் செயல்படத் தொடங்கும்” என்றார்.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் உற்பத்தியாளர்கள் அசோசியேசன் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் பேசியதாவது:

“நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பேர் செய்கிற தொழிலாக குறு தொழில்கள் இருக்கின்றன. மூன்றாம் உலகப் போர் என்று சொல்லத்தக்க வகையில் கரோனா இன்று தொழில் துறையைப் பெரியதாகப் பாதித்துள்ளது. இன்றுள்ள மோசமான நிலை தொடர்ந்தால் குறு தொழில்களின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறியாகி விடும். குறு தொழில்களில் பணி செய்த 50 சதவீத வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். உள்ளூரில் இருக்கும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு வர பயப்படுகிறார்கள். மீறி அவர்கள் வேலைக்கு வந்தால் அவர்களது குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்த நிலை.

இந்த கரோனா நெருக்கடி நிலையிலும் வாடகை, தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம் ஆகிய செலவுகளைச் செய்தே ஆகவேண்டிய நிலைக்கு குறு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரப் பிரச்சினைகளோடு போராடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கினால் மிகுந்த உதவியாக இருக்கும். வங்கிகள் வட்டியில்லா கடனை வழங்க வேண்டும். மீண்டும் குறு தொழில்களைத் தொடங்கும்போது, லாபம் என்பதை மறந்து, தொழிலைத் தக்கவைப்பதற்கான வேலைகளைக் கூடுதலாகச் செய்ய வேண்டும். பயமின்றி மனோதைரியத்துடன் செயல்பட்டால் மட்டுமே குறு தொழில்களை நம்மால் காப்பாற்ற முடியும்” என்றார்.

சென்னை பாரத ஸ்டேட் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் டி.ஆர்.சுப்ரமணியன் பேசியதாவது:

“இன்றைய நிலையில் சிறு மற்றும் குறு தொழில்கள் நெருக்கடியான நிலையில் உள்ளன என்பது உண்மைதான். அவைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் வங்கிகளும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளன. அந்தத் திட்டங்களின் மூலமாக விரைவாக வங்கிக் கடன் கிடைப்பதோடு, குறைந்த வட்டியிலும் வழங்கப்படுகிறது. ரூ.1 கோடி முதல் 5 கோடி வரை வருவாய் உள்ளவை குறு தொழில்களாகவும், ரூ.10 கோடி முதல் 50 கோடி வரை வருவாய் உள்ளவை சிறு தொழில்களாகவும், ரூ.50 கோடி முதல் 250 கோடி வரை வருவாய் உள்ளவை நடுத்தர தொழில்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா காலச் சிக்கல்களை மனதில்கொண்டு தொடங்கப்பட்டுள்ள சில திட்டங்களைப் பற்றி சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அறிந்துகொண்டு, அதன் பயனை அடையலாம். இணையம் வழியாகவே விண்ணப்பிக்கக் கூடிய திட்டங்களும், எஸ்சி. எஸ்டி பெண் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்புத் திட்டங்களும் தற்போது நடைமுறையில் உள்ளன. எவ்வகையான தொழில் செய்வோராக இருந்தாலும் எதையும் திட்டமிட்டு, முறையான பட்ஜெட் போட்டு செய்யும்போது, இப்படியான நெருக்கடியான காலங்களிலும் பாதிப்பிலிருந்து மீண்டு வரலாம்” என்றார்.

நிகழ்வில் சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள், MSME உறுப்பினர்கள், தொழில் முனைவோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களின் பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குத் தொழில்துறை வல்லுநர்கள் பதிலளித்தனர்.

இந்த நிகழ்வைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x