

தேனி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கல்லூரி விடுதிகளில் இதற்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை 477பேர் வரை இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேர் இறந்த நிலையில் 150 பேர் குணமாகி உள்ளனர். தற்போது 325 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆரம்பத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
குமுளி சோதனைச் சாவடியில் பணிசெய்த காவலர், அல்லிநகரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர், கம்பம் வடக்கு, தெற்கு காவல்நிலையத்தில் பணிபுரிபவர்கள் என்று 5 காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் குடும்பத்தினர், தனியார் வங்கி ஊழியர் என்று 47பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.
இன்று மதியம் நிலவரப்படி அல்லிநகரம் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலரின் மனைவி குழந்தைகள், போடி துப்புரவுத் தொழிலாளர்கள் என்று மொத்தம் 30 பேருக்கு இத்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு வரை தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சிகிச்சை அளிக்கும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கம்பம், போடி, பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டு துவங்கப்பட்டுள்ளது.
மேலும் போடி அரசு பொறியியல் கல்லூரி, தேனி என்எஸ்.பொறியியல் கல்லூரி விடுதிகளிலும் சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.