

எட்டயபுரத்தில் போலீஸார் தாக்கியதில் மனமுடைந்த கட்டிடத் தொழிலாளி கணேஷமூர்த்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற கனிமொழி எம்.பி. இன்று மாலை எட்டயபுரம் வந்தார். பிறகு, கணேசமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி ராமலட்சுமிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் திமுக சார்பில் அவரிடம் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
அவருடன் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பி.கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், பேரூர் செயலாளர் பாரதிகணேசன், தொழில்நுட்பப் பிரிவு லெனின் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இது தனியாக எங்கேயோ நடக்கக்கூடிய விஷயமல்ல. தொடர்ந்து பல பேர் தாக்கப்படுகின்றனர். மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சிலர் சிறையிலேயே மரணம் அடையக் கூடிய நிலையும் ஏற்படுகிறது. இதெல்லாம் நிறுத்தப்படவேண்டும். அதற்குச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். சட்டங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இவற்றைத் தடுக்க சட்டத்தில் உள்ள விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சட்டத்தில் உள்ள மக்களைப் பாதுகாக்கக் கூடிய விஷயங்களைத் தாண்டி தான் நினைத்ததைச் செய்யலாம் என்ற நிலை மாற வேண்டும்'' என்றார்.