Last Updated : 27 Jun, 2020 07:16 PM

 

Published : 27 Jun 2020 07:16 PM
Last Updated : 27 Jun 2020 07:16 PM

கரோனா தொற்றைத் தடுக்க சென்னைக்கு இணையாக மதுரையிலும் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்: அமைச்சர் உதயகுமார்  தகவல்

மதுரை

கரோனா தொற்றைத் தடுக்க சென்னைக்கு இணையாக மதுரையிலும் போதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியிலுள்ள கோவிட் கேர் மையத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது, அமைச்சர் கூறியது:

தென் தமிழகத்தின் தலைநகர் போன்றது மதுரை. இங்கு விமானம், ரயில், சாலை வழியாக வெளிநாடு, மாநிலங்கள், மாவட்டங்களில் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் வருவோரை கிராமங்களில் ஏற்படுத்திய விஜிலென்ஸ் கமிட்டி மூலம் கண்டறிந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

முதல்வரின் அறிவுரைபடி வீடு, வீடாக சென்று தொற்று கண்டறிந்து உரிய சிகிச்சைகள் அளிக்கிறோம்.

அதன்படி மதுரை மாநகராட்சியில் 1400 கண்காணிப்பு பணியாளர் களுக்கு தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தினமும் 100 வீடுகள் என்ற அளவில் 300 வீடுகள் என, இலக்கு நிர்ணயித்து தொற்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 55 வயது மேல், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வெளியில் வருவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.

அரசு அலுவலகங்களைப் போன்று பொது மக்கள் அதிகம் கூடும் அனைத்து பொதுநிறுவனங்களுக்கும் தானியங்கி கை சுத்திரிப்பான் இயந்திரங்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்.

வருமுன் காப்போம் என்ற முன்எச்சரிக்கை அடிப் படையில் பரிசோதனையை அதிகரித்துள்ளோம். இதன்படி, நோய்த் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து குணப்படுத்துவதே ஊரடங்கின் முக்கிய நோக்கம். தினமும் 2 ஆயிரம் பேர் என, பரிசோதனை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநகர், புறநகர் பகுதிகளில் 2,500 கண்காணிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று களப்பணி செய்கின்றனர். மீனாட்சி மிஷன் நர்சிங் கல்லூரி, மதுரை தெற்கு கூட்டுறவு பயிற்சிமையம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கோவிட் கேர் சென்டர்களில் தேவையான படுக்கை, பொருட்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. சென்னைக்கு இணையாக மதுரை மாவட்டத்திலும் வசதிகளை ஏற்படுத்தி 35 லட்சம் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் 94 சதவீதம் குணமடைகின்றனர்.

கடந்தாண்டு பிற நோய்களால் இறந்தவர்களைவிட, இவ்வாண்டு குறைவு, மதுரை அரசு மருத்துவமனையில் 1400 படுக்கை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

பிற அரசு மருத் துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கென 2546 படுக்கை வசதிகளுடன் மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளனர்.

கோவிட் கேர் சென்டர்களில் 4500 படுக்கை வசதிகள் உள்ளன. நாளைய தினம் அனைத்து தளர்வுகளும் ரத்து செய்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட பொதுமக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஆட்சியர் டிஜி. வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், டீன் சங்குமணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x