Last Updated : 27 Jun, 2020 06:27 PM

5  

Published : 27 Jun 2020 06:27 PM
Last Updated : 27 Jun 2020 06:27 PM

தவறு செய்யும் காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவது தண்டனையா?- காவல்துறை அதிகாரிகள் விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

சாத்தான்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள், ஆம்பூர் அருகே மளிகைக் கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தைத் தூக்கி நடுரோட்டில் வீசிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபோன்று காவலர்கள் எங்கு தவறு செய்தாலும் அதைத் தொடர்ந்து நாம் கேட்கும் செய்தி, சம்பந்தப்பட்ட நபர் ஆயுதப்படைக்கு மாற்றம் என்பதே. அப்படி மாற்றப்படும் நபர் ஆயுதப்படையில் என்னதான் செய்வார்? ஆயுதப்படைக்கு மாற்றுவது எந்தவகையில் தண்டனையாகும்? காவல்துறை அதிகாரிகளிடமே இதுகுறித்துக் கேட்டோம்.

"காவல்துறையில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. அதில் முதலாவது சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற வழக்குகளைக் கையாளும் பிரிவு. காவல் நிலையங்களில் பணிபுரிவோர் இந்தப் பிரிவின் கீழ் வருவர். இவர்கள்தான் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் காவலர்கள். இரண்டாவது ஆயுதப் படைப் பிரிவு.

முக்கியப் பிரமுகர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, முக்கிய விழாக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, சிறைக் கைதிகளைத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது, கருவூலங்களில் இருந்து பணத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லப் பாதுகாப்பு அளிப்பது போன்ற பணிகளில் ஆயுதப்படைக் காவலர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மூன்றாவது, தமிழ்நாடு சிறப்பு காவல் படைப்பிரிவு (பட்டாலியன்). எங்கேனும் கலவரம், அசாதாரண சூழல் ஏற்பட்டால் அதை ஒடுக்கப் பட்டாலியன்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு வேறு பணிகள் இருக்காது.

தவறு செய்ததற்குத் தண்டனையாக ஆயுதப் படைக்கு மாற்றப்படும் காவலர்கள் அங்கேயே கடைசி வரை பணிபுரிய மாட்டார்கள். சில வாரங்கள் அல்லது மாதங்களில் மீண்டும் அவர்கள் காவல் நிலையப் பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள். சம்பளம் எல்லாம் அனைவருக்கும் ஒன்றுதான். அது ஏதும் குறைக்கப்படாது.

மாறுபடும் அதிகார வரம்பு
காவல் நிலையங்களில் இருந்தால் விசாரிக்கலாம், வழக்குப் பதிவு செய்யலாம். குற்றவாளியிடமிருந்து உண்மையை வரவழைக்க மிரட்டலாம். ஆனால், ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டபிறகு யாரையும் நேரடியாக விசாரிக்கவோ, வழக்குப் பதிவு செய்து கைது செய்யவோ அவர்களால் முடியாது. சட்டம், ஒழுங்கு பணியில் உள்ள போலீஸாருக்கு, ஆயுதப்படை போலீஸார் உதவி மட்டுமே செய்ய முடியும்.

இதே, உயர் அதிகாரிகள் தவறு செய்தால் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவார்கள். அவர்களுக்குச் சில காலம் பணி ஏதும் ஒதுக்கப்படாது’’.

இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x