Published : 27 Jun 2020 06:16 PM
Last Updated : 27 Jun 2020 06:16 PM

உயிர் காக்கும் ஊசி மருந்துகளைக் கொள்முதல் செய்ய முடிவு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்கும் பொருட்டு கரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளைக் கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை:

''தமிழக அரசு, தமிழக முதல்வர் தலைமையில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கவும் , கட்டுப்படுத்தவும், தீவிர முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

1,769 மருத்துவர்கள் உட்பட 14,814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளைத் தருவித்துப் பயன்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் Tocilizumab (400 mg), 42,500 குப்பிகள் Remdesivir (100 mg) மற்றும் 1,00,000 குப்பிகள் Enoxaparin (40 mg) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் ஓரிருநாட்களில் வந்தடையும்.

இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயர்தர உயிர்காக்கும் மருந்துகளைக் கொள்முதல் செய்வதும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்துப் பயன்படுத்துவதிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

மேலும், தேவையின் அடிப்படையில் இம்மருந்துகள் கூடுதலாகத் தருவிக்கப்படும். தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத மனித உயிரிழப்புகளைத் தவிர்க்க உதவும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x