

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலராப் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் அழகாபுரி விலக்கு அருகே உள்ள காவல் சோதனைச் சாவடியில் பணியாற்றியதால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதையடுத்து, காவல் நிலையம் பூட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் விருதுநகர் மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஒருவர் உள்பட இன்று ஒரே நாளில் 58 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து, மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் நாளிதழ் நிருபர் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 372 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அரசு பெண் மருத்துவர்கள் 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைபெற்று வருவதும், குறிப்பிட்ட அரசு பெண் மருத்துவர் ஒருவர் ஒரே நாள் இரவில் 4 கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்ததும், அதையடுத்து அந்த 4 தாய்மார்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.