

சென்னை குடிசை பகுதிகளில் கரோனா தொற்று குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, மூலக்கடையில் இன்று (ஜூன் 27) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 56% பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள 1,974 குடிசைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வார்டிலும் ஏ.இ. தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இங்கு கண்காணிக்கப்படுகின்றன. நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா, தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் ஆகியவற்றை இந்த குழுக்கள் கண்காணிக்கின்றன.
மாதவரம் மண்டலத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் 245 பேர். தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் எண்ணைக்கை 294. மாதவரம் மண்டலத்தில் இதுவரை 202 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதுவரை 12 ஆயிரத்து 661 பேர் இதன்மூலம் பயன் பெற்றுள்ளனர். அனைத்து வார்டுகளையும் சேர்த்து 800 முதல் 1,000 காய்ச்சல் முகாம்கள் தினந்தோறும் நடத்தப்படுகின்றன. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டதால் தாமாக முன்வருகின்றனர்.
சென்னையில் நிறைய 'கோவிட் கேர் சென்டர்' அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.