கரோனா திட்டம் என்ற பெயரில் ரூ.3000 மதிப்புள்ள உபகரணத்தைக்கூட ரூ.12 ஆயிரத்துக்கு வாங்குகின்றனர்; கே.என்.நேரு குற்றச்சாட்டு

கே.என்.நேரு: கோப்புப்படம்
கே.என்.நேரு: கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா தடுப்புப் பணிகளில் அதிமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் இன்று (ஜூன் 27) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்கியதால்தான் கரோனா பரவியதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். சீனாவில் கரோனா பரவிக் கொண்டிருந்த காலத்திலேயே, தமிழ்நாட்டில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பணக்காரர்களுக்கும், 70 வயதுக்கும் மேல் உள்ளவர்களுக்கும்தான் வரும் என முதல்வர் பழனிசாமி சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். இப்போது அவரது அலுவலகத்துக்குள்ளேயே வந்துவிட்டது. ஒரு அமைச்சருக்கும், ஆளும்கட்சிக்காரர்களுக்கும்கூட வந்துவிட்டது. இதனால் கரோனா பரவிவிட்டது எனக் கூற முடியுமா?

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படியே செய்கிறோம். சில இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எம்எல்ஏவாக இருந்த ஜெ.அன்பழகன் நிவாரணப் பணியின் காரணமாக கரோனா தொற்று ஏற்பட்டு இறக்கவில்லை. அவர் ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

இப்போது தமிழ்நாட்டில் சுமார் 957 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். அதற்குப் பிறகும்கூட போதிய அளவுக்கு இங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கரோனா நோய் தடுப்புப் பணியில் அதிமுக அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. செய்ய வேண்டிய பணிகளைக் காலம்தவறிச் செய்ததால், தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மை இல்லாத சம்பவத்தைக்கூட, உண்மைபோலவே பேசக்கூடியவர். அப்படிப் பேச அவரைவிட்டால் இங்கு வேறு யாரும் இல்லை. கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதல்வர் மறுத்து வருகிறார்.

எந்தக் கட்சியாக இருந்தாலும், போதிய இடைவெளி விட்டு கூட்டங்களை நடத்த வேண்டும். முதல்வர் செல்லக்கூடிய இடங்களிலும் தனிமனித இடைவெளியின்றி கூட்டம் கூடுவதால் கரோனா பரவ வாய்ப்புள்ளது.

ஊரடங்கு காரணமாக நகர்ப்புறங்களில் உள்ள கட்டிடத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், வண்ணப் பூச்சாளர்கள் உள்ளிட்ட தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பட்டினியாக உள்ளனர். அவர்களுக்கு இந்த அரசு எதையும் செய்யவில்லை.

முதல்வர் பழனிசாமி சேலத்துக்கு மட்டும் செல்வது ஏன் என மு.க.ஸ்டாலின் கேட்டார். எனவே, இப்போது கோவைக்கும், திருச்சிக்கும் சென்றுள்ளார். மேட்டூரில் 100 அடியில் தண்ணீர் உள்ள நிலையில் பாசனத்துக்குத் திறந்ததை சாதனை என்கிறார். திமுக ஆட்சிக் காலத்தில் 43 அடி இருந்தபோதே, பாசனத்துக்காக முதல்வர் கருணாநிதி தண்ணீர் திறந்தார். பருவநிலை கைகொடுத்தால் எதுவும் சாத்தியமே. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால் கடைமடைக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. குடிமராமத்துப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தனித்தனியாக மேற்கொள்ளாமல், தொகுப்பு தொகுப்பாக செய்கின்றனர்.

கரோனா எப்போது முடியும் என்று கேட்டால் கடவுளுக்குத்தான் தெரியும் என்றும், வருண பகவானின் ஆசியால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் என்று முதல்வர் கூறுகிறார். அப்படியானால் இவர் எதற்கு ஆட்சி நடத்த வேண்டும்?

முன்பெல்லாம் உள்ளாட்சி அமைப்புக்கு வரக்கூடிய பணத்தை அங்குள்ள பிரதிநிதிகளே, உள்ளூரின் தேவை அறிந்து செலவு செய்வார்கள். ஆனால், இப்போது ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக நேரடியாக செலவிடப்படுகிறது. உள்ளூரில் என்ன தேவை என்பது உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குத்தானே தெரியும். அதேபோல, கரோனா திட்டம் என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள உபகரணத்தைக்கூட, ரூ.12 ஆயிரத்துக்கு வாங்குகின்றனர். அரசுக்கு வருவாய் இழப்பு என முதல்வர் கூறி வரும் நிலையில், தினந்தோறும் அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தம் வெளியிடப்படுவது எப்படி?

ஆளும்கட்சி செய்யும் தவறை எடுத்துச் சொல்வது, அரசை வேகமாகச் செயல்பட வைப்பதே எதிர்க்கட்சிகளின் வேலை. பாராட்டி மாலை அணிவிப்பது எதிர்க்கட்சியின் பணியில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் குறை சொல்வது சரியானது அல்ல. உண்மைக்கு மாறான தகவல்களை முதல்வர் கூறுகிறார்.

சசிகலா விடுதலை குறித்து சிறைத்துறையிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அவர் வந்தால் அரசியலில் மாற்றங்கள் வரலாம். அடுத்த கட்சி தொடர்புடையது என்பதால், இதுகுறித்து நான் பேசக்கூடாது.

திருச்சி மாவட்டத்தில் போதுமான அளவுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்படவில்லை. அதிகமாக செய்தால், நோய் தொற்றுள்ள இன்னும் அதிகம் பேரைக் கண்டுபிடிக்க முடியும். கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. 2 மாதமாக எடுக்க வேண்டியதை அளவீட்டை, ஒரே மாதமாக கணக்கிட்டு எடுத்ததால் இந்தக் குளறுபடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திமுக தலைவரிடம் ஆலோசித்து உரிய முடிவெடுக்கப்படும்".

இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in