மதுரையில் ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக ரூ.1,000 விநியோகம் 

திருமோகூர் ஸ்ரீராம்நகரில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை மற்றும் தமிழக முதல்வரின் கரோனா விழிப்புணர்வுக் கடிதத்தை வழங்கும் ரேஷன் கடை பணியாளர் ஆனந்த்.
திருமோகூர் ஸ்ரீராம்நகரில் குடும்ப அட்டைதாரருக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை மற்றும் தமிழக முதல்வரின் கரோனா விழிப்புணர்வுக் கடிதத்தை வழங்கும் ரேஷன் கடை பணியாளர் ஆனந்த்.
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது அங்குள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டது. அதேபோல், மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து, மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 5 லட்சத்து 39 ஆயிரத்து 331 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ரூ.53 கோடியே 93 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கரோனா தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று நிவாரணத் தொகையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மதுரையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் விநியோகம் இன்று (ஜூன் 27) தொடங்கியது. நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் அவர்களது கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரூ.1,000 வழங்கினர். மேலும், கரோனா பரவாமல் தடுக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்த முதல்வரின் வேண்டுகோள் மற்றும் அரசின் விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் அட்டைதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

மதுரையில் ஊரடங்கு பகுதியில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3 நாளில் ரூ.1,000 பணம் வழங்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in