Published : 27 Jun 2020 11:09 AM
Last Updated : 27 Jun 2020 11:09 AM

மனம் திறந்து பேசுங்கள்; மன உளைச்சல் நம்மை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் கடுமையான உடல்நலக் கேடு விளையும்; ராமதாஸ் அறிவுரை

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பதற்கு அரசு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 27) வெளியிட்ட அறிக்கை:

"இந்தியாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ், மருத்துவம், பொருளாதாரம் சார்ந்த பாதிப்புகளைக் கடந்து இப்போது புதிய பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கரோனா வைரஸ் தாக்குதலும், கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மிகப்பெரிய அளவில் மனநலம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அவற்றைச் சரியாக மேலாண்மை செய்யாவிட்டால் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட மார்ச் 24-ம் தேதி தொடங்கி நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த மே 31-ம் தேதி வரையிலான காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும் கூட, குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்களில் 86 விழுக்காட்டினர் யாருடைய உதவியையும் கோரவில்லை; 77% பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அவையும் கணக்கில் சேர்க்கப்பட்டால் குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக அதிகரித்திருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.

குடும்ப வன்முறைகளையும், அதற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான மன அழுத்தங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ள நிலையில், குடும்ப வன்முறைகளுக்காக கரோனாவைத் தவிர வேறு யாரையும் நொந்து கொள்வதில் பயன் இல்லை.

கரோனா வைரஸ் மக்களை நேரடியாகத் தாக்குவது மட்டுமே பாதிப்பு இல்லை. மாறாக, பணி நீக்கம், ஊதியக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பம் சார்ந்த தேவைகளைச் சமாளிக்க முடியாதபோது, அவர்களின் மன அழுத்தம் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. அதில் சில வடிவங்கள் வன்முறையாக மாறி குடும்ப உறவுகளைச் சிதைக்கின்றன. எந்த வேலையும் கிடைக்காமல் வறுமையில் வாடும் அமைப்பு சாராத ஏழைத் தொழிலாளிகளின் இயலாமையும் பல நேரங்களில் குடும்ப வன்முறைக்குக் காரணமாகி விடுகிறது. இவை எதுவுமே நியாயப்படுத்த முடியாதவை; தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை.

குடும்ப வன்முறைகளைக் காட்டிலும் மன அழுத்தங்கள்தான் இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அலுவலங்களுக்குச் சென்று பணி செய்து நண்பர்களுடன் பழகி, வெளியிடங்களுக்குச் சென்று வந்த ஆண்களும், பெண்களும் 'வீட்டிலிருந்து பணி' என்ற புதிய கலாச்சாரத்திற்கு கட்டாயமாகத் தள்ளப்பட்டு, யாரையும் சந்திக்க முடியாமல் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடைப்பது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று வந்த மாணவர்கள் விரும்பத்தகாத விடுமுறை என்ற பெயரில் வீடுகளில் அடைந்து கிடப்பதுடன் விளையாட முடியாத வெறுப்பில் உள்ள அவர்கள் மீது ஆன்லைன் வகுப்புகள் என்ற ஒவ்வாமை திணிக்கப்படுவது, குடும்பத்தினர் அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் சென்ற பிறகு குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கும் சிறிது நேர ஓய்வும் பறிக்கப்பட்டு, காலை முதல் இரவு வரை சமையலறைகளில் பணியாற்ற வேண்டியிருப்பது என ஒவ்வொருவரின் மன உளைச்சலுக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளன.

இந்தக் காரணங்களுக்கு அடிமையாவதை தவிர்த்து, அவற்றிலிருந்து மீண்டு வருவதுதான் குடும்பத்தில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் நிரந்தரமாக நிலவச் செய்யும். மாறாக, மன உளைச்சல் நம்மை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் கடுமையான உடல்நலக் கேடு விளையும்.

அண்மைக்காலங்களில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தேவையில்லாத குற்ற உணர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி தற்கொலை செய்துகொண்டு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளும் அவலமும் நடைபெறுகிறது. திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் அதிபர் இதற்கு தெரிந்த உதாரணம் என்றால், வெளியில் தெரியாத உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.

கரோனா பாதிப்புக்கு ஆளாவது ஒரு குற்றச்செயலும் அல்ல; ஆளானவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்களும் அல்ல; அது ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அதற்கு அவர் மட்டுமே காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், எவரும் திட்டமிட்டு கரோனா நோயைப் பரப்புவதில்லை. அதனால், கரோனா பாதித்தவர்கள் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மன உளைச்சலுக்கோ ஆளாக வேண்டியதில்லை.

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேபோல், மக்களின் மன உளைச்சலைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இன்றைய சூழலில் மக்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்களைக் கொண்டு அனைத்து வகை ஊடகங்கள் மூலமாக தீர்வுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை மன அழுத்தத்திலிருந்து மீட்பதற்கு அந்த ஆலோசனைகள் பெரிதும் உதவும்.

மன உளைச்சலையும், மனச்சுமையையும் போக்குவதற்கு நமக்கு நாமே நடைமுறைப்படுத்த வேண்டிய பல தீர்வுகளும் உள்ளன. கரோனாவால் பொருளாதாரப் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள், எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து மீண்டு வருவது பற்றி சிந்திக்க வேண்டும். வீட்டிலிருந்து பணியாற்றுவதால் பாதிக்கப்பட்டவர்கள் பணிக்கும், குடும்பத்தினருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கி அதைக் கடைப்பிடிக்க வேண்டும். மன அழுத்தத்தைப் போக்க புத்தகங்களைப் படிக்க வேண்டும்; ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு பக்கமாவது மனதில் தோன்றிய விஷயங்களை எழுத வேண்டும். மனதிற்கு இதம் தரும் இசை மற்றும் பாடல்களைக் கேட்கலாம்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் ஆகியவற்றின் மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வூட்டிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் உரிய பாதுகாப்புகளுடன் பல்லாங்குழி, தாயம், கேரம், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடலாம். குடும்பத்தினரிடமும், நண்பர்களுடனும் மனம் விட்டுப் பேசி மனக்கவலைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் மேலாக கரோனா குறித்த தேவையற்ற அச்சங்களை விலக்கி, அரசின் வழிகாட்டுதல்படி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் கரோனாவையும், மன அழுத்தத்தையும் விரட்டி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x