

சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்துகடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
காவல் நிலையத்தில் அவர்களை போலீஸார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதாலேயே அவர்கள் உயிரிழந்ததாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், வணிகர்கள் இருவரின் உயிரிழப்பைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு நடத்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதை ஏற்று தமிழகம் முழுவதும் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மளிகை மற்றும் காய்கறி கடைகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இல்லாத சூப்பர் மார்க்கெட்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. சென்னை புறநகர் பகுதிகளில் முழு அடைப்பால், திருமழிசை காய்கறி சந்தையில் நேற்றுகாய்கறி விற்பனை குறைந்திருந்தது. மேலும் பேரமைப்பின் வேண்டுகோளின்படி, சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் நேற்று மாலை, உயிரிழந்த வணிகர்கள் இருவரின் படங்களுக்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அசோக் பில்லர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரமைப் பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்று அஞ்சலிசெலுத்தினார்.