

இந்தியாவில் கரோனா வைரஸால் 4.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும்அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இது மிக வேகமாக பரவி வருகிறது.
கரோனா வைரஸ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சுகாதாரத் துறையினருக்கு சிரமம் இருந்தது. பலருக்கு அறிகுறி தெரியாததால் மேலும் பலருக்கும் தொற்று பரவ காரணமாகினர்.
ஆனால், கடந்த சில வாரங்களாகவே இந்த வைரஸ் பரவும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு அரசு அறிவித்தசளி, இருமல், தொண்டை வலி,காய்ச்சல், சுவையின்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இவற்றில் ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலேயே அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணைஇயக்குநர் பழனி கூறும்போது, “முன்பு அறிகுறி இல்லாமல் தொற்று பரவியதால் வாய்ப்புள்ளவர்கள் என்று கருதும் 100 பேரிடம் பரிசோதனை செய்தால் 6 அல்லது 7 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகும்.
தற்போது 80 சதவீதம் பேருக்குஅறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இதனால் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது எளிதாக உள்ளது. தற்போது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அவர்களில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிறது” என்றார்.