

குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் முழுமையாக வழங்கப் படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள், முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணி ஆகியவை குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வி, சட்டம், வணிகவரி, பதிவு, மக்கள் நல்வாழ்வு- குடும்ப நலன் ஆகிய துறைகளின்சார்பில் ரூ.25.53 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.
கதவணை பணி 40% நிறைவு
ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியது:
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் புஞ்சை புகளூர் கிராமத்தில் காவிரியாற்றின் குறுக்கே ரூ.406.5 கோடி மதிப்பில் கதவணைகட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கொம்பில் கொள்ளிடத்தில் உடைந்த மேலணைக்குப் பதிலாக ரூ.387.60 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகள் 40% நிறைவடைந்துள்ளன.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் காவிரி டெல்டா பகுதியில் இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதில்லை. ஆனால், நிகழாண்டில் இதுவரை 25.10 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனை.
குடிமராமத்து பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். இதில், எவ்வித மாறுபட்ட கருத்தும் கிடையாது.
கடைமடையை தண்ணீர் சென்றடைவதைக் கணக்கிட்டுத்தான் இப்போதும் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது கர்நாடகத்தில் போதிய மழை இல்லை. இருப்பினும் காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயமாக வருண பகவான் நமக்கு கருணைக் காட்டுவார். நல்ல மழை பொழியும். விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும்.
ஊரடங்கால் கடந்த 2 மாதங் களில் அரசுக்கு ரூ.35,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் நிதி நிலையைக் கருத்தில்கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப் படும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநில அமைச்சர்கள் என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மற்றும் எம்எல்ஏக்கள் உடனிருந்தனர்.
அடுத்த கட்ட ஊரடங்கு?
முதல்வர் பழனிசாமி மேலும் கூறியபோது, “கரோனா தொற்று தொடர்பாக தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்ட சரியான நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டு, குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக ஜூன் 29-ம் தேதி தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மற்றும் மத்திய அரசின் அறிவிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே ஊரடங்கு தொடர்பான அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.
கரோனா பரவலைத் தடுப்பதில் மருத்துவத் துறையினர் கூறும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே அரசு செயல்படுகிறது. எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை” என்றார்.