

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெள்ளிக்கிழமை காலை 8.30மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 13 செமீ, ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஆகிய இடங்களில் தலா 11 செமீ, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி, மதுரை மாவட்டம் தல்லாகுளம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.