Published : 27 Jun 2020 06:46 am

Updated : 27 Jun 2020 06:46 am

 

Published : 27 Jun 2020 06:46 AM
Last Updated : 27 Jun 2020 06:46 AM

கரோனா வைரஸ் சிகிச்சையில் எந்த மருந்து ‘கேம் சேஞ்சர்’?

which-drug-plays-game-changer-in-coronavirus

தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவுதான் என்றாலும் அந்த எண்களுக்குள் ஒளிந்துள்ள குடும்பத் துயரத்தை எண்ணும் போது நெஞ்சம் பதறுகிறது. ஆரம்பத்தில் முதியவர்களும் துணை நோய் உள்ளவர்களும்தான் கரோனாவுக்குப் பலி ஆவார்கள் என்றனர். ஆனால், இப்போது இளைய வயதினரையும் குழந்தைகளையும் தாக்கும் நோயாகக் காட்சி மாறுகிறது.

கரோனா பரவிய தொடக்கத்தில் இதற்கு மருந்து இல்லை; கரோனா வைரஸ் அடிக்கடி உருவம்மாறும் தன்மை கொண்டதால் இதற்கு மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது என்றார்கள். இப்போதோ தினமும் ஒரு புதிய மருந்தைச் சொல்கிறார்கள். இதனால் பொதுமக்கள் குழப்பம்தான் அடைகின்றனர்.

மருத்துவ வழக்கப்படி எந்த ஒரு நோய்க்கும் அங்கீகரிக்கப்பட்ட புதிய மருந்தாக உலகளவில் உலக சுகாதார நிறுவனம்தான் அறிவிக்க வேண்டும். அந்த மருந்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தலாமா என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சிமையம் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து, அந்த மருந்தைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவரஇந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதிவழங்க வேண்டும். ஆனால் தற்போதைய நடைமுறைகள் எல்லாம் இந்த வழக்கத்தை மீறுவதாக உள்ளன. உலகளவில் இதற்கு முதல் அடி போட்டவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மதிப்பிழந்த ஹைட்ராக்சி குளோரோகுவின்

அமெரிக்காவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அதற்கு ‘ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரை சாப்பிடலாம்’ என்று ட்ரம்ப் ஆலோசனை சொன்னார். அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரையைக் கொடுத்துச் சோதித்ததில் எதிர்பார்த்த பலன் எதுவும் கிட்டவில்லை. அதனால்சென்ற வாரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒருமித்த குரலில் அதிபரின் ஆலோசனையை நிராகரித்துவிட்டன.

இந்த வாரம் ‘டெக்சாமெத்தசோன்’, ‘ஃபேவிபிரவிர்’, ‘ரெம்டெசிவிர்’ எனும் மருந்துகள் விளம்பரங்களில் இடம்பிடித்துள்ளன. போதாக்குறைக்கு இந்தியாவில் ஆயுர்வேத மருந்துக்குப் பெயர் பெற்ற பதஞ்சலி நிறுவனம் இருமலுக்கு உரிமம் பெற்றமருந்தை கரோனாவைக் குணப்படுத்தும் மருந்தாகஇப்போது விளம்பரப்படுத்தி உள்ளது. மேற்சொன்ன மருந்துகளில், ‘டெக்சாமெத்தசோன்’ ஏற்கனவே ஆஸ்துமா, மூட்டுவலி, ஒவ்வாமை போன்றவற்றுக்கு வழங்கப்படும் மருந்துதான். உடலில்அழற்சிப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் மலிவானஸ்டீராய்டு மருந்து இது. இதே ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்த மெதில்பிரட்னிசலோன் எனும் மருந்துகரோனா நோயாளிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே வழங்கப்படுவதால் மருத்துவர்களுக்கு இது புதிய செய்தி இல்லை. இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கரோனா நோயாளிகளுக்கு ‘டெக்சாமெத்தசோன்’ மருந்தைக் கொடுத்தபோது,வென்டிலேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்குநோயின் கடுமை குறைந்து, உயிரிழப்பும் குறைந்தது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால்,இதுவே கரோனாவை முழுவதுமாகக் குணப்படுத்திவிடும் என்று அவர்கள் சொல்லவில்லை.

ஹைட்ராக்சி குளோரோகுவின் மாத்திரைக்கு இதயத்துடிப்பு தொடர்பான பக்கவிளைவுகள் உள்ளதைப் போல ‘டெக்சாமெத்தசோன்’ மருந்துக்கும் பல பக்கவிளைவுகள் உண்டு. ஆகவே, இதை சுய மருத்துவமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்திருக்கிறார்கள். கரோனா கடுமையாக உள்ளவர்களில் ஆக்ஸிஜன் செலுத்தப்படுவோருக்கு மட்டுமே ‘டெக்சாமெத்தசோன்’ பலன் தரும். அதிலும் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அம்மாக்களுக்கும் இது ஆகாது.

பொதுவான பார்வையில் இது ஒரு நல்ல செய்தி போல் தெரிந்ததால், ஊடகங்கள் அனைத்தும் இந்த ‘மலிவான மருந்து’ மூலம் கரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று விளம்பரப்படுத்தி விட்டன. இது ஓர் ஆராய்ச்சி முடிவுதானே தவிர, அங்கீகரிக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பு அல்ல; ஆராய்ச்சி முடிவுக்கும் கண்டுபிடிப்புக்கும் வித்தியாசம் தெரியாத திருவாளர் பொதுஜனத்துக்கு அது கரோனா நோயாளிக்கு உயிர் காக்கும் மருந்தாக ஒரு போலியான நம்பிக்கையைத் தந்துவிட்டது.

பேவிபிரவிர் சர்ச்சை

அடுத்து ரெம்டெசிவிர், ஃபேவிபிரவிர் எனும் மருந்துகள். முன்பு எபோலா காய்ச்சலைக் குணப்படுத்த உதவிய ரெம்டெசிவிர் ஊசி மருந்தை இப்போது கரோனா வைரஸ் பாதித்த இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கும் வழங்க இந்தியமருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளது. பத்து நாட்களுக்கு இதை வழங்க வேண்டும்.மிகவும் அவசரநிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆய்வு நோக்கில் மட்டும் இந்த மருந்தை வழங்க வேண்டும். மற்றவர்களுக்கு இது உதவாது.

அடுத்ததாக, 2014-ல் இன்ஃபுளூயன்சா நோய்க்கு ஜப்பான் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபேவிபிரவிர் மாத்திரையை இப்போது கரோனா நோயாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம். ஒரு மாத்திரை 200 மி.கி. அளவில் கிடைக்கிறது. முதல் நாள் ஒரு வேளைக்கு 9 மாத்திரைகள் வீதம் 2 வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த 13 நாட்களுக்கு காலையிலும், மாலையிலும் தலா 4 மாத்திரைகள் வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மொத்தம் ரூ 14,000 வரை செலவாகும். மிதமான அறிகுறிகள் கொண்ட ஆரம்பக்கட்ட கரோனா நோயாளிகளுக்கு மட்டுமே இது கொடுக்கப்பட வேண்டும்; மற்றவர்களுக்கு இது பயன்படாது என்கிறது அந்த நிறுவனம்.

இந்த மருந்து குறித்தும் மருத்துவத் துறையில் சர்ச்சைகள் கிளம்பிவிட்டன. ஒரு புதிய மருந்து சந்தைக்கு வர 12 – 18 மாதங்கள் ஆகும். காரணம்,அது 5 கட்ட நடைமுறைகளைக் கடந்து வர வேண்டும். முதலில் அதை விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்க்க வேண்டும். ஆபத்தான விளைவுகள் இல்லை என்று தெரிந்த பிறகு, குறிப்பிட்ட வயதுள்ளவர்களுக்குக் கொடுத்துப் பார்க்க வேண்டும். அதே வயதுள்ளவர்களுக்கு இந்த மருந்துபோல் தோற்றமளிக்கும் வெற்று மருந்துகளை கொடுக்க வேண்டும். ஆனால் அது அவர்களுக்குத் தெரியக் கூடாது. இரண்டு வகையினரையும் ஒப்பிட்டு நோக்கிமருந்தின் பலனை அறிய வேண்டும். இதற்கு தன்னார்வ கரோனா நோயாளிகள் தேவைப்படுவார்கள். ஓராண்டு காலத்துக்கு அவர்கள் உடலில்ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்றுதொடர்ந்து சோதிக்க வேண்டும். பக்க விளைவுகள் இல்லை என்றால் மட்டுமே அதை வணிகத்துக்குத் தயாரிக்க அரசின் அனுமதி பெற முடியும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் அது மக்கள் பயன்பாட்டுக்கு வரமுடியும்.

ஆனால், ஃபேவிபிரவிர் மருந்துக்கு இப்படிப் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. 12 மருத்துவமனைகளில் மொத்தமே 150 நோயாளிகளிடம்தான் இந்த மருந்தைக் கொடுத்துப் பார்த்ததாகவும், மூன்று கட்ட ஆய்வுகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாகவும் இதை நோயாளியிடம் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில் இந்த மருந்துக்கு இவ்வளவு அவசரமாக அனுமதி அளிக்க என்ன அவசியம் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

காரணம், கரோனாவைப் பொறுத்தவரை ஆரம்பக்கட்ட நோயாளிகளுக்கு எவ்வித சிகிச்சையும் இல்லாமலேயே நோய் குணமாவதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியானால் மிகுந்த செலவுடன் இந்த மருந்தை ஆரம்பக்கட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன என்பதும் வல்லுநர்களின் கேள்வி.

இந்தியாவில் இன்னும் இரண்டு கட்ட ஆய்வுகள் முடியாத நிலையில் ஒரு புதிய மருந்துக்கு அனுமதி அளிப்பது எப்படிச் சரியாகும்? அந்த இறுதிக்கட்ட ஆய்வுகளில் இந்த மருந்துக்குப் பக்கவிளைவுகள் உள்ளதாகத் தெரிந்தால், அதுவரை இதைப் பயன்படுத்திய பயனாளிகளின் ஆரோக்கியம் என்னாவது? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில்கள் இல்லை. ஆனால் மருந்து நிறுவனத்துக்கும் மருத்துவமனைகளுக்கும்தான் பலன் கிடைக்கும்.

‘கேம் சேஞ்சர்’ மருந்து?

உண்மை என்னவென்றால், கரோனா வைரஸ் ஏற்படுத்தும் கோவிட்-19 நோயில் ஆரம்பநிலை, நுரையீரல் நிலை, அழற்சி நிலை என 3 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் தனித்தனி மருந்துகள் உள்ளன. ஆபத்துக்குப் பாவமில்லை என்பதாக சோதனை அடிப்படையில்தான் இவை தரப்படுகின்றன. இதுவரை எந்த மருந்தும் கரோனாவுக்கே உரித்தான முழுமையான மருந்தாக அங்கீகரிக்கப்படவில்லை. டைபாய்டு, காசநோய் போன்றவற்றுக்கு உள்ளது போல் ஒரு நோயின் எல்லா நிலைகளுக்கும் ஏற்ற பொதுவான மருந்து கோவிட்-19 நோய்க்கு இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படிக் கண்டுபிடிக்கப்படும் மருந்துதான் கரோனா சிகிச்சையில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கமுடியும். அதுவரை முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி காப்பது, கைச் சுத்தம் பேணுவது போன்றவைதான் நம்மைக் காக்கும் கைகண்ட மருந்துகள் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, கரோனாவுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு மற்றும் அதன் தயாரிப்பு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் அறிவிப்பதும் விதிகளை மீறி விளம்பரம் செய்யும் மருந்து நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதும் காலத்தின் கட்டாயம். இந்த நிலைப்பாட்டை செயல்படுத்தினால் மட்டுமேகரோனா சிகிச்சையில் திருவாளர் பொதுஜனத்துக்கு உண்மையான நம்பிக்கை பிறக்கும்.

டாக்டர் கு. கணேசன். பொதுநல மருத்துவர்

கரோனா வைரஸ் சிகிச்சைகரோனா வைரஸ்கேம் சேஞ்சர்ஹைட்ராக்சி குளோரோகுவின்டெக்சாமெத்தசோன்பேவிபிரவிர் சர்ச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author