Published : 26 Jun 2020 10:39 PM
Last Updated : 26 Jun 2020 10:39 PM

தூத்துக்குடியில் 36 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.62 கோடி நிவாரண நிதி: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 36,267 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரூ. ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி கயத்தாறில் தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு நிவாரண நிதி வழங்குவதை தொடங்கி வைத்து பேசும்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. ஆயிரம் வழங்கும் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 36,267 பேர் பயன்பெறுவார்கள். முதற்கட்டமாக கயத்தார் வட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகமே விழித்திருக்க வேண்டும், விலகியிருக்க வேண்டும். தனித்திருக்க வேண்டும் என கூறும்போது இதற்கு முரண்பாடாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஒன்றிணைவோம் வா என கோஷத்தை முழங்குகிறார். உலகத்திலேயே இதுபோன்ற ஒரு கோஷத்தை வேறு எந்தத் தலைவரும் வைத்ததில்லை.

சாத்தான்குளம் வியாபாரிகள் உயிரிழப்பு சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்ப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இதில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அதன் அடிப்படையில் தான் அரசு அடுத்த கட்டமாக செயல்பட முடியும்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலில் கூட்டுறவு வங்கிகள் இயங்க வேண்டும் என்பது ஏற்புடைய கருத்தல்ல. மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தமிழக அரசு எதிர்த்ததைப்போல், இதனையும் எதிர்க்கும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x