

ஜெயராஜ், பென்னிக்ஸைக் கொன்றவர்கள் நேரடிக் குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களைப் பார்த்து மருத்துவமனைக்குப் பரிந்துரைக்காத மருத்துவர், அந்தக் காயங்களைப் பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீஸின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே என்று உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர். பின்னார் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர். திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது 302 ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் இருவர் மரணத்தில் போலீஸார் மட்டுமல்ல அவர்கள் குற்றத்தைக் கண்டுகொள்ளாமல் துணைபோனவர்களும் குற்றவாளிகளே. அவர்களும் விசாரிக்கப்பட வேண்டியவர்களே என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் போலீஸார் பொதுமக்களை முட்டிபோட வைத்து, இம்போசிஷன் எழுதவைத்தபோது சிரித்தோம், இப்போது அழுகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“ட்ரோன் விட்டனர், முட்டிபோட வைத்தனர், இம்போசிஷன் எழுத வைத்தனர். அன்று சிரித்தோம். மதுரை அப்துல்ரஹீமைக் கொன்றனர், கோவை தள்ளுவண்டி சிறுவனைத் தாக்கினர். உச்சமாக ஜெயராஜ்-பென்னிக்ஸைக் கொன்றுள்ளனர். இன்று அழுகிறோம். தவறை முதல் புள்ளியிலேயே தடுக்க-தட்டிக்கேட்க வேண்டும்.
ஜெயராஜ், பென்னிக்ஸைக் கொன்றவர்கள் நேரடிக் குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களைப் பார்த்து மருத்துவமனைக்குப் பரிந்துரைக்காத மருத்துவர், அந்தக் காயங்களைப் பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், போலீஸின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்குத் துணைபோனவர்களே.
இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் . அதற்கு முன்பாக கொலைவழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிட மாற்றம், காத்திருப்புப் பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே''.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.