மளிகைக்கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசும் தலைமைக் காவலர் ரகுராமன்.
எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி வீசும் தலைமைக் காவலர் ரகுராமன்.
Updated on
2 min read

ஆம்பூர் அருகே மளிகைக்கடையில் இருந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தைத் தூக்கி நடுரோட்டில் வீசிய தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒருசில பகுதிகளில் விதிமுறைகள் மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியில் உமராபாத் போலீஸார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ராஜா (48) என்பவர் தனது மளிகைக்கடையின் ஒரு பகுதியை மட்டும் திறந்து வைத்து வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட உமராபாத் தலைமைக் காவலர் ரகுராமன் என்பவர் மளிகைக்கடைக்குச் சென்று உரிமையாளர் ராஜாவிடம், "கடையை மூடச்சொல்லியும் கேட்காமல் வியாபாரம் செய்கிறாயா?" எனக் கேட்டு அவரைக் கண்டித்தார். மேலும், மளிகைக்கடையில் இருந்து எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை தூக்கி நடுரோட்டில் வீசினார். இதில், எடை இயந்திரம் சேதமடைந்தது.

இதை அந்த வழியாகச் சென்ற ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து, வியாபாரியிடம் கெடுபிடி காட்டிய காவலர் மீது திருப்பத்தூர் எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊரடங்குக் காலத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் சிறு, குறு வியாபாரிகளிடம் போலீஸார் கண்டிப்புடன் நடந்துகொள்வதால் சாத்தான்குளத்தில் 2 வியாபாரிகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை எழுப்பியிருப்பதால், ஆம்பூர் சம்பவமும் பெரும் பரபரப்பாகிவிடக்கூடாது என்பதற்காக திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரத்துக்கு இன்று (ஜூன் 26) காலை வந்தார்.

புதிய எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை வழங்கிய திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார்.
புதிய எலக்ட்ரானிக் எடை இயந்திரத்தை வழங்கிய திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார்.

மளிகைக்கடை உரிமையாளர் ராஜா கடைக்குச் சென்ற எஸ்.பி. விஜயகுமார் காவலர் மூலம் சேதமடைந்த எலக்ட்ரானிக் எடை இயந்திரத்துக்கு மாற்றாக புதிய எடை இயந்திரத்தை வாங்கிக் கொடுத்தார். பிறகு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த எஸ்.பி. விஜயகுமார், ஊரடங்குக் காலத்தில் விதிமுறைகளை வியாபாரிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கடை உரிமையாளர் ராஜாவுக்கு அறிவுரை வழங்கினார்.

அதே நேரத்தில், மளிகை வியாபாரி ராஜாவிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தலைமைக் காவலர் ரகுராமனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டார். திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமாரின் இந்தச் செயலுக்குப் பலரும் நன்றி தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in