

திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க விவசாயப் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ததில் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் இன்று (ஜூன் 26) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வருடன் விவசாயப் பிரதிநிதிகள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த சிவசூரியன், புலியூர் நாகராஜன், காந்தி பித்தன், ராஜா சிதம்பரம், பூ.விசுவநாதன், ம.ப.சின்னதுரை, என்.கணேசன், என்.வீரசேகரன், ஆர்.சுப்பிரமணியன், அப்துல்லா, சிதம்பரம், சண்முகசுந்தரம் ஆகிய 12 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
போலீஸார் இந்தப் பெயர்கள் அடங்கிய பட்டியலை வைத்துக்கொண்டு வேளாண் அலுவலர் முன்னிலையில் விவசாயப் பிரதிநிதிகளை ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.
அதேவேளையில், நாடு முழுவதும் அறியப்பட்ட பி.அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பெயர்கள் அந்தப் பட்டியலில் இல்லை. மேலும், பட்டியலில் பெயர் இல்லாத விவசாயிகளை உள்ளே அனுமதிக்க போலீஸார் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், பி.அய்யாக்கண்ணுவுக்கு மட்டும் சுற்றுலா மாளிகையில் தனி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கூறும்போது, "திருச்சி மாவட்டத்தில் 35-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் உள்ளன. அந்தந்தப் பகுதி சார்ந்து விவசாயச் சங்கங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. அனைத்துச் சங்கங்களையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால், முதல்வருடனான சந்திப்புக்கு அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட, அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டாதவர்களைத் தேர்வு செய்துள்ளனர்.
குறிப்பாக, முதல்வருக்கு உண்மைத் தகவல்களைக் கூறுவோர், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசுபவர்கள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கூறியும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.
இது தொடர்பாக பி.அய்யாக்கண்ணுவிடம் கேட்டபோது, "சுற்றுலா மாளிகையில் முதல்வரைச் சந்திக்க எனக்குத் தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கத்தினர் சிலருக்கு ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்தது குறித்து தெரியாது" என்றார்.
இது தொடர்பாக மாவட்ட வேளாண் வட்டாரங்களில் கேட்டபோது, "விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அல்ல. விவசாயப் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்குத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது. கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து விவசாய சங்கங்களில் இருந்தும் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய முடியாது. எனவே, 5 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
பின்னர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் பலரும் அரசைக் கண்டித்து பல்வேறு கட்டங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்தான். அதேவேளையில், பி.அய்யாக்கண்ணு தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டு வாங்கியுள்ளார். எனவே, விவசாய பிரதிநிதிகளைத் தேர்வு செய்ததில் சிறிதளவும் பாரபட்சம் காட்டப்படவில்லை" என்றனர்.