Published : 26 Jun 2020 06:39 PM
Last Updated : 26 Jun 2020 06:39 PM

10-ம் வகுப்புத் தேர்ச்சி: தனித்தேர்வர்களுக்கும் பொருந்தும் என்று அறிவித்திடுக: தமுஎகச வேண்டுகோள்

பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பானது பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்குமே நிபந்தனையற்று பொருந்தும் என்று தெளிவுபடுத்தி உத்தரவினை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு தமுஎகச வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் நிர்வாகிகள் ஆதவன் தீட்சண்யா, மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:

“கரோனா ஊரடங்குக் காலத்தில் பொதுத்தேர்வை நடத்தக்கூடாது என்று மாணவர் நலனில் அக்கறையுள்ள பலரும் வலியுறுத்தியதன் பேரில் தமிழக அரசு தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவருமே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. ஆனால் இந்த ஆரவாரமான அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண், வருகைப் பதிவேடு அடிப்படையில் தான் தேர்ச்சி என்றாகியுள்ளது.

மேலும், பல்வேறு காரணங்களால் காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வினை எழுதத் தவறிய மாணவர்கள் மற்றும் நேரடியாக பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் ஆகியோரின் தேர்ச்சி நிலை என்னவென்று இன்னமும் தெளிவுபடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் இயங்கும் இரண்டு பள்ளிகளின் மாணவர்கள் உள்ளிட்ட 190 பேர் தனித் தேர்வர்களாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 1989-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடக்கும்போதே மும்பையிலும் தேர்வை நடத்தி தமிழகத்தில் தேர்வு முடிவு அறிவிக்கும்போதே மும்பை தேர்வர்களுக்கான முடிவையும் அறிவிக்கின்ற கடந்த கால நடைமுறை இவ்வாண்டும் கடைப்பிடிக்கப்படும் என்று இந்த 190 பேரும் காத்திருந்தனர்.

ஆனால், இவர்களது தேர்ச்சி நிலையும் இன்னமும் தெளிவுடுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. எனவே, பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி என்கிற அறிவிப்பானது பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்குமே நிபந்தனையற்றுப் பொருந்தும் என்று தெளிவுபடுத்தி உத்தரவினை வெளியிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு தமுஎகச சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x