Last Updated : 26 Jun, 2020 06:19 PM

 

Published : 26 Jun 2020 06:19 PM
Last Updated : 26 Jun 2020 06:19 PM

தென்காசி மீன் வியாபாரி தற்கொலை விவகாரம்: ஆலங்குளம் எஸ்.பி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் அவமானத்தில் மீன் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆலங்குளம் எஸ்பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்காசியை சேர்ந்த ஜமுனாபாய் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் அருண்குமார் மீன் விற்பனை தொழில் செய்து வந்தார். கடந்த மே 21-ம் தேதி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த கணவர், நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றதாகக் கூறினார்.

மறுநாள் காலை இருசக்கர வாகனத்தை வாங்கி வருவதற்காக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நான் காவல் நிலையம் சென்றபோது என் கணவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார்.

காவல்துறையினர் தாக்கியதில் அவருக்கு காயங்கள் இருந்தன. அவரை வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் அதிக மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் 23-ம் தேதி கல்லறை தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதால் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதனை மறைத்து குடிபோதையில் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகவே எனது கணவரின் இறப்பு குறித்து மறுவிசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x