Published : 26 Jun 2020 05:58 PM
Last Updated : 26 Jun 2020 05:58 PM

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு: சம்பந்தப்பட்ட போலீஸார் மீது ஐபிசி 302-ன் கீழ் வழக்குப் பதிவு: திமுக கோரிக்கை

இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், முதல்வர், கட்சியினர் அனைவரும் காவல்துறை தயவில் இருக்கிறார்கள். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் முதல்வரே காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்கிற எண்ணம் இருக்கிறது என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழக சிறைகளில் இதுவரை 260 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் இதற்கு முன் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாமெல்லாம் வெளியில் செல்கிறோம் என்றால் காவல்துறையை நம்பிச் செல்கிறோம். வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்கிறோம் என்றால் காவல்துறையை நம்பித்தான் செல்கிறோம்.

காவல்துறையினர் நம்மைப் பாதுகாக்கிறார்கள் என்று நம்பி வாழ்கிறோம். அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வண்ணம் தந்தையும் மகனும் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் போலீஸ் காவலில் மரணமடைந்தால் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இவர்கள் அதைச் செய்யவில்லை.

அவர்களைக் காப்பாற்ற முதல்வரே முன் வந்து நிற்கிறார். அவர்கள் நோயினால் இறந்தார்கள் என்கிறார். இது தொடர்கதையாக உள்ளது. இந்தக் கோபம் இன்று நேற்று வந்ததல்ல. சிறையில் 260 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள் என்றால் இந்த அரசு சிறையில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால் வேறு யாருக்கு பாதுகாப்பு கொடுக்கும்?

இந்த வழக்கில் காவல்துறையினரே தவறு செய்கிறார்கள், கொலைகாரர்களாக மாறியுள்ளார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இருவரையும் முதலில் பணி மாற்றம் செய்கிறார்கள். பிறகு சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பாமல் இருந்தால் இந்த நிலை தொடரும்.

இந்த ஆட்சி எதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவில்லை. பணிபுரிபவர்கள், காவல்துறையினரைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவில்லை. நோயையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் யாரையும் கொண்டு வராமல் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது இந்த ஆட்சி தான்.

இந்த நாடே கரோனாவின் தாக்கத்தால் பற்றி எரியும்போது முதல்வர் தலைமைச் செயலத்தில் இருந்து பணியாற்றாமல் சொந்த ஊருக்கு அடிக்கடி செல்கிறார். ஒரு முதல்வரே இப்படி இருந்தால் அரசாங்கம் எப்படிச் செயல்படும். ஏதாவது ஒன்றைக் கேட்டால் உடனே ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றுகிறார்கள். ஏன் மாற்றுகிறார்கள்? எதற்கு மாற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஒருவர் பொறுப்பில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் கவனித்து மாவட்டத் தலைமைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். முதல்வர் தலைமைச் செயலகத்தில் இருந்து பணியாற்ற வேண்டும். பாவம் முதல்வரால் தனது ஊழியர்களைக்கூட காப்பாற்ற முடியவில்லை.

மக்களுக்கு எந்தவித நன்மையையும் இந்த ஆட்சி செய்யவில்லை. ஆனால், நாங்கள் ஏற்கெனவே கூறியபடி கரோனாவால் மக்கள் மடிவதைவிட பசியாலும், பட்டினியால் மரணமடைபவர்கள், காவல்துறை தாக்குதலால் மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

எங்கள் வேண்டுகோள் எல்லாம், நீதிமன்றம் வழக்கைக் கையிலெடுத்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். சம்பந்தவட்டவர்கள் மீது ஐபிசி 302-ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இதுபோன்ற நிலை தொடர்ந்து வராமல் நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று நீதிமன்றம் மூலம்தான் நியாயம் கிடைக்கிறது. இந்தக் கட்சி ஆட்சி செய்யவில்லை. அனைத்திற்கும் நியாயம் கிடைக்க நீதிமன்றத்தை நாடும் சூழ்நிலைக்கு இந்த ஆட்சி நம்மைத் தள்ளியுள்ளது. அதேபோன்று இதிலும் நீதிமன்றம் தலையிட்டு உரிய நியாயம் கிடைக்க உதவ வேண்டும்.

இந்தப் பிரச்சினையில் இந்த அரசு சரியாக நடக்கவில்லை என நாங்கள் கருதினால் திமுக நீதிமன்றத்தை நாடும் முடிவில் இருக்கிறது. இதுபோன்ற நிலை யாருக்கும் இனி நடக்கக்கூடாது. ஏற்கெனவே திமுக தலைவர் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி நிதி உதவியும், அரசுப் பணியும் வழங்கவேண்டும் எனக் கோரியுள்ளார். அதை நிறைவேற்ற வேண்டும்.

இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் இருக்க இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்றவர்கள் செய்வதற்கு அஞ்சுவார்கள். அரசாங்கம் இதை உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்யத் தவறினால் ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையே போய்விடும்.

எந்தப் புகாரையும் காவல் துறையை நம்பி மக்கள் சென்று புகார் அளிக்கிறார்கள் என்றால், அந்தக் காவல் துறை நமக்கு எதிரிகளாக இருந்தால் நாம் யாரை நம்பி வாழ்கிறோம். காவல்துறை மீதுள்ள நம்பிக்கையை தகர்க்கும் விதமாக இது நடந்துள்ளது. இந்த ஆட்சியின் கையாலாகாத்தனம் இதில் வெளிப்படுகிறது.

100 நாள் போராட்டம் நடத்திய பின்னர், போராட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவுடன் வந்த மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்றார்கள். அம்மக்களின் கோரிக்கை நல்ல காற்று, நல்ல தண்ணீர் வேண்டும் என்ற சாதாரண கோரிக்கை மட்டுமே.

அவர்கள் கோரிக்கை குறித்து ஆராய 15 நாள் போதும். ஆனால் 100 நாட்கள் போராடவிட்டு அவர்கள் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் அதன் பின்னர் 13 பேரைச் சுட்டுக்கொன்ற அரசாங்கம் இது. இந்த மக்களைக் காப்பாற்றும் என்கிற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள், திமுக தலைமையில் களத்தில் இறங்குவார்கள். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் தயங்கமாட்டோம்.

அந்தக் குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் முதல்வர் முதலில் நோயால் இறந்தார்கள் எனத் தெரிவித்து பின்னர் எதிர்ப்பு கிளம்பியவுடன் மாற்றிச் சொல்கிறார். குடும்பத்தில் இறந்தவர்கள் 31 வயது இளைஞர், அவரது தந்தை 61 வயது நபர். இவர்கள் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். 31 வயது இளைஞர் உயிரிழப்புக்கு அரசாங்கம் கொடுக்கும் இழப்பீடு 10 லட்சம் ரூபாய். இதுதான் அந்தக் குடும்பத்துக்கு தரும் தீர்வா?

உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இழக்கும்போது கடைசியில் எங்கள் புகலிடம் நீதிமன்றம்தான். நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்துள்ளது. அதில் நாம் எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றம் முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

குரூரமாக இருவரும் நடத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மீதமுள்ள விவகாரத்தைப் பார்ப்போம். நீதிமன்றத்தை மட்டுமே நாங்கள் நம்பியாகும் நிலையில் இருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், முதல்வர், கட்சியினர் அனைவரும் காவல்துறை தயவில் இருக்கிறார்கள். காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் முதல்வரே காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்கிற எண்ணம் இருக்கிறது. காரணம் இவர்கள் செய்கிற பல தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள காவல்துறையை உற்சாகத்தில் வைத்துள்ளார்களோ என்கிற எண்ணம் தோன்றுகிறது''.

இவ்வாறு டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x