

தூத்துக்குடியில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் பணியாற்றும் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆலை மற்றும் கிராமம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் 756 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கரோனா பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள பிரபரலமான கடல் உணவு பதப்படுத்தும் ஆலையில் பணியாற்றி வரும், தூத்துக்குடி அருகேயுள்ள அத்திரமரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 7 பெண்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த ஆலை மூடப்பட்டு, மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், அத்திமரப்பட்டி கிராமம் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்களுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
5 செவிலியர்களுக்கு கரோனா
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 31 செவிலியர்கள் ஷிப்ட் முடிந்து, தனியார் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5 செவிலியர்களுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற செவிலியர்களும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.