அக விலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

அக விலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்: ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு
Updated on
1 min read

அக விலைப்படியை தொடர்ந்து ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்கப்படும். இந்த ஊக்க ஊதியம் ஆசிரியர்களின் பணிக்காலத்தில் 2 முறை வழங்கப்படும். அதேபோல் அரசு ஊழியர்களுக்கு ஒருமுறை அட்வான்ஸ் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான அட்வான்ஸ் ஊதிய உயர்வை கடந்த மார்சில் தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஆசிரியர்கள் குறித்து குறிப்பிடாததால், ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த அரசாணையை காட்டி, மாவட்ட கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் ஜோசப்சேவியர், சிவகங்கை மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன் கூறியதாவது: பல ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு உயர்க் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அட்வான்ஸ் ஊதிய உயர்வு மட்டுமே நிறுத்தப்பட்டது.

ஆனால் கருவூல அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வை தர மறுக்கின்றனர். ஏற்கனவே அகவிலைப்படியை நிறுத்திய நிலையில் ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தியது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து முதல்வர், கல்வித்துறை அமைச்சர், துறை இயக்குநர்கள், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு தெளிவான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in