

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கடன் திட்டத்தில் அனைத்து ஜவுளி நிறுவனங்களும் பயனடைய மத்திய அரசு உதவ வேண்டும் என்று இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் செய்தியாளர்களிடம் இன்று (ஜூன் 26) கூறியதாவது:
"கரோனா தொற்றால் வீழ்ச்சியடைந்திருந்த ஜவுளித் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து வருகிறது. மலிவுவிலை ஜவுளிப் பொருட்கள், மதிப்பு குறைவாக உள்ள பொருட்களின் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. எனினும், மால்கள், ஷோரூம்களில் விற்பனையாகும் ஆடை வகைகளின் விற்பனை இன்னும் தொடங்கவில்லை. எலெக்ட்ரானிக் வணிகத்தில் ஆடைகள் விற்பனை மேம்பட்டு வருகிறது.
ஜவுளி ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் நடுத்தர நிலையில் உள்ளன. அடுத்த காலாண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஜவுளித் தொழில் நிறுவனங்கள் 40 சதவீதம் அளவுக்கு இயங்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய சூழலில் இவை மெதுவாகத்தான் மீளும். தேவையை அறிந்து உற்பத்தியை அதிகரிக்கலாம்.
இந்தியாவிடமிருந்து ஜவுளிப் பொருட்களை வாங்க பல வெளிநாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக, செயற்கை இழை ஆடை உற்பத்தியை வலுப்படுத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் பாலிஸ்டர் பஞ்சு சர்வதேச விலையில் கிடைப்பதால், ஜவுளித் தொழில் நிறுவனங்கள் செயற்கை இழை ஆடை உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தலாம். இதற்காக ஐ.டி.எஃப். முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக அறிவித்துள்ள கடன் திட்டங்கள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. புதிய வரைமுறைப்படி அவசரகால கடன் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.25 கோடிக்கும் குறைவாகக் கடன் இருந்தால் மட்டுமே, புதிய கடனுதவியைப் பெற முடியும். இந்த வரம்பை ரூ.100 கோடியாக உயர்த்த வேண்டும். இதனால் அதிக அளவிலான ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பயனடையும். இது தொடர்பாக மத்திய நிதியமைச்சம் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அமைச்சகத்துக்குக் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.
நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கான ஆய்வறிக்கையையும் அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் அனுப்பியுள்ளோம். சுமார் 30 முதல் 40 சதவீத நிறுவனங்களின் கடன் மறுசீரமைப்புக்கு மத்திய அரசு உதவினால், ஜவுளித் தொழில் துறை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவியாக அமையும்.
எங்கள் அமைப்பின் 'இந்தியா ஃபார் ஷ்யூர்’ (India for sure) திட்டத்தில் இணைந்து செயல்பட தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றன. முதல் கட்டமாக ஏராளமான நிறுவனங்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஜூலை 15-ம் தேதி முதல் இந்தத் திட்டம் முதல் கட்டத்தை அடையும் .
வருங்காலங்களில் இந்திய ஜவுளிப் பொருட்களுக்கு ஜப்பான் சந்தையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆரம்பகட்ட வியாபாரத் தொடர்புக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் உதவ வேண்டும்".
இவ்வாறு பிரபு தாமோதரன் தெரிவித்தார்.