சென்னையில் கரோனா தொற்றால் 1,005 போலீஸார் பாதிப்பு

சென்னையில் கரோனா தொற்றால் 1,005 போலீஸார் பாதிப்பு
Updated on
1 min read

சென்னையில் கரோனா நோய்த்தடுப்புப் பணியில் முன்னணிக் கள வீரர்களாக இருக்கும் காவல் துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதுவரை பல முன்னணி ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 1,005 போலீஸார் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் சிகிச்சையில் தேறியுள்ளனர். 3 பேர் உயிரிழந்த சோகமும் நடந்துள்ளது.

கரோனா தொற்று தீவிரமாகப் பரவிய நிலையில் ஏப்ரல் மாதத்தில் சென்னையில் லேசாக கரோனா தொற்று ஆரம்பித்தது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் சென்னை போலீஸார் ஈடுபட்டனர். கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் முன் களப்பணியாளர்களாகப் பணியாற்றிய போலீஸாருக்கும் கரோனா பரவியது.

இதில் முதன்முதலில் முத்தையால் பேட்டை எஸ்.ஐ. பாதிக்கப்பட்டார். பின்னர் வடக்கு கடற்கரை காவல் நிலைய எஸ்.ஐ.பாதிக்கப்பட்டார். முதல் பலியாக சொந்த ஊருக்கு விடுப்பில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதனிடையே கோயம்பேட்டில் கரோனா தொற்று அதிகரித்தபோது அண்ணா நகர் துணை ஆணையர் பாதிக்கப்பட்டார். வடக்கு கூடுதல் ஆணையரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

ஏராளமான துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், போலீஸார், ஆயுதப்படை போலீஸார் என நூற்றுக்கணக்கில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். முன்கள வீரர்களாகப் பணியாற்றும் போலீஸார் சோர்ந்துவிடாமல் இருக்கவும், மன உளைச்சலுக்கு ஆளாகமல் இருக்கவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கரோனா தொற்றால் மீளும் போலீஸாரை நேரில் வாழ்த்தி வரவேற்கும் பணியைச் செய்து வந்தார்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸார், நாள்பட்ட நோயுடன் இருக்கும் போலீஸாரை நேரடிக் காவல்பணியில் ஈடுபடுத்தாமல் மற்ற பணிகளுக்குப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. போலீஸாருக்கு ஓய்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா தொற்றால் காவல்துறையில் சில இறப்புகளும் நிகழ்ந்தன. மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி இளம் வயதிலேயே கரோனா பாதிப்பினால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதேபோன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. ஒருவரின் மனைவி, மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. 49 வயதே ஆன எஸ்.பி.யின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார். காவல்துறையினர் இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் 1,500 போலீஸார் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் மூன்றில் இரண்டு பங்கு போலீஸார் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை காவல்துறையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. 1,005 போலீஸார் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 410 போலீஸார் சிகிச்சையில் உடல்நலம் தேறியுள்ளனர். பலர் பணியிலும் இணைந்துவிட்டனர். மீதமுள்ளவர்கள் தனிமைப்படுத்துதலில், மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in