

சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த தந்தை - மகனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று (ஜூன் 26) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
"தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும். இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.
குடும்பத்தின் இரண்டு தூண்களாய் இருந்த தந்தையையும், மகனையும் இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கு அதிமுக தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அனைத்திந்திய அதிமுகவின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்.
அதிமுக அரசும், அதிமுகவும் என்றென்றும் மக்களின் நம்பிக்கைக்குரிய வகையில் பணியாற்றி, நீதியை நிலைநாட்டும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்"
இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.