

தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கோவில்பட்டி கிளைச் சிறையின் பதிவேடுகளை புகைப்படம் எடுத்தும், சிசிடிவி காட்சிகளையும் பாதுகாப்பாக வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸாரால் தாக்கப்படுவது கரோனா தொற்று போன்ற ஒரு தொற்றாகும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தூத்துக்குடி எஸ்பி மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்தார்.
பின்னர் காணொலி காட்சி வழியாக ஆஜரான எஸ்பி, தற்போது தூத்துக்குடி பகுதியில் அமைதி திரும்பியுள்ளது என்றார்.
அரசுத் தரப்பில், தந்தை, மகன் பிரேத பரிசோதனை அறிக்கை தயாராக உள்ளது. ஊரடங்கால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியவில்லை. நோய் தொற்று காலத்தில் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு 3வது முறையாக சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலர், சட்டத்துறை செயலர் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு போலீஸாருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று கிளைச் சிறையின் நிர்வாக பதிவேடுகள் மற்றும் மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுத்தும், வழக்கு தொடர்பான அனைத்து சிசிடிவி பதிவுகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். கோவில்பட்டி கிளைச் சாலையில் ராஜாசிங் என்பவரும் போலீஸாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூடுதல் மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரித்து நீதிமன்றத்தில் தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
போலீஸாரால் தாக்கப்படுவது கரோனா தொற்று போன்ற ஒரு தொற்றாகும். கரோனா தொற்று காலத்தில் அனைவருமே மன அழுத்தத்தில் உள்ளனர். போலீஸார் கூடுதல் மன அழுத்தத்தில் உள்ளனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள், வன்முறையை தூண்டும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இவற்றை தவிர்க்க வேண்டும். இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும். நீதிமன்றத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.