

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்கான தேவை இல்லை என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (ஜூன் 26) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"வல்லரசு நாடுகளான ஸ்பெயின், இத்தாலியில் கரோனா தொற்றால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா ஊரடங்கால் தொழில்கள் நலிவடைந்துள்ளன. இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையின்படி, கிட்டத்தட்ட 1 லட்சத்து 57 ஆயிரத்து 98 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க 4,145 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில், 74 ஆயிரத்து 388 நிறுவனங்களுக்கு 2,675 கோடி ரூபாய் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது இந்திய அளவில் 10%. ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இங்கு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 15 ஆயிரத்து 126 கோடி ரூபாய் தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதனால், 47 ஆயிரத்து 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நல்ல தீர்ப்பை பெற்றுத்தந்தது அதிமுக அரசு தான். குடிரமராமத்து திட்டம் என்ற நல்லதொரு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
டெல்டா பகுதியில் விளைந்த 25 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்து தமிழக அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 6.96 லட்சம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இதில் 1 கோடிக்கும் மேலானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களுக்குத் தேவையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இக்குழுக்களுக்கு கடன் வழங்க 315 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
வரும் திங்கள்கிழமை (ஜூன் 29) மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். அவர்கள் சொல்லும் கருத்துகள் மற்றும் மத்திய அரசின் அறிவிப்புகளை பொறுத்து அறிவிக்கப்படும்.
மின்சார சட்டத்திருத்தம் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுமா?
தமிழக அரசு விவசாயிகளுக்குத் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கும்
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதே?
மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுமா?
அதற்கான தேவை இல்லை.இரு மாநிலங்களுக்கான பிரச்சினை என்றால் கூட்டலாம். இது முழுக்க மருத்துவ துறையைச் சார்ந்தது. வல்லுநர்கள் கருத்துகளின் அடிப்படையில் அரசு செயல்படுகிறது. மருந்து கண்டுபிடிப்பது மட்டும் தான் இந்நோய்க்கான தீர்வு.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.