Published : 26 Jun 2020 04:17 PM
Last Updated : 26 Jun 2020 04:17 PM

முன்னாள் எம்எல்ஏவுக்குக் கரோனா: தொற்று அதிகரிப்பதால் கோவை மக்கள் அச்சம்

கோயம்புத்தூர்

மூன்று வாரம் முன்பு வரை கரோனா தொற்று இல்லாமல் பச்சை மண்டலமாக இருந்த கோவை, இப்போது தொற்று எண்ணிக்கையில் 347-ஐக் கடந்துள்ளது. நேற்று மட்டும் 29 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கோவை மக்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தொற்றுக்குள்ளானோரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இருவர் ஆகியோரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அவினாசி, வால்பாறை ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏவாகப் பதவி வகித்த ஆறுமுகம், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்புகளிலும் உள்ளார். இவருக்கும் பஞ்சாலைத் தொழிலாளர் சங்கப் பொருளாளர் சிவசாமி, மேற்கு மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் கரோனா மருத்துவ மையமாகச் செயல்படும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இவர்கள் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே ஆறுமுகம் தீவிரமான தொழிற்சங்க செயல்பாட்டாளர். தொழிலாளர்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளுக்காக அன்றாடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பவர். இரண்டு நாட்களுக்கு முன்புகூட, இவரும் பஞ்சாலைத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளும் மாநகராட்சி அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துச் சென்றனர்.

இதற்கிடையே, பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் சுப்பிரமணியன் கரோனா தொற்றால் மரணமடைந்தார். அவர் இறப்புக்கு யாரும் செல்லவில்லை. மூன்று நாட்கள் கழித்து அவர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். அதில் குறைந்த அலுவலக ஆட்களே கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் இவர்களில் ஆறுமுகம், சிவசாமி, ஜேம்ஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளனர். அதில் மூவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணிப்பு வளையத்துக்குக் கொண்டுவரும் பணிகளைச் சுகாதாரத் துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னையில் மீண்டும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து பெரும்பான்மையான வெளியூர்வாசிகள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாகவே மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் கரோனா தொற்று அசுர வேகமெடுத்து வருகிறது. அதில் கோவையும் தப்பிக்கவில்லை. இதுவரை கோவையில் 347 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 29 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அடைக்கப்பட்ட கோவை தெரு ஒன்று

கிராஸ்கட் ரோட்டில் ஒரு நகைக் கடையில் 5 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்தக் கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது. காந்திபுரம் 4 மற்றும் 6-வது வீதிகளில் தொற்று ஏற்பட்டு அங்கு தெருவே அடைக்கப்பட்டது. தேர்முட்டி அருகே ஒரு தங்கப்பட்டறை தொழிலாளிக்குத் தொற்று என அந்தத் தெரு அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பாப்பம்பட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு உணவகம் அடைக்கப்பட்டது. நீலம்பூர் அருகே ஆர்.ஜி.புதூரில் 30 பேருக்குத் தொற்று உறுதியானதால், அந்த ஊரே பரபரப்பில் ஆழ்ந்திருக்கிறது.

கணியூர் தொழிற்சாலை ஒன்றில் அலுவலர் ஒருவருக்குத் தொற்று உறுதியானதால் அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டது. சாயிபாபா கோயில் அருகே உள்ள எம்ஜிஆர் காய்கனி மார்க்கெட்டில் 200 பேருக்குச் சளி மாதிரி சோதிக்கப்பட்டதில் 3 பேருக்குத் தொற்று உறுதியானது. இதையடுத்து ஒரு வார காலமாக அந்த மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்கள் தாங்களே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் சுகாதாரத் துறை அலுவலர்கள்.

‘வெளியூரிலிருந்து யாராவது வந்தால் உடனே மாநகராட்சிக்குத் தகவல் தரவும்’ என கோவை மாநகரின் ஒவ்வொரு வீதியிலும் ஆட்டோ, வேன் மூலம் அறிவிக்கப்படுகிறது. வீடு வீடாக வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள், “உங்கள் வீட்டில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் உண்டா?’’ என விசாரித்துக் குறிப்பெடுக்கிறார்கள்.

இதனால், கரோனா பரவல் குறித்த பதற்றம் கோவை மக்கள் மத்தியிலும் மெல்லப் பரவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x