

கன்னியாகுமரி மீனவ கிராமங்களில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. தூத்தூரில் மட்டும் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
குமரி மாவட்டத்திற்கு வெளிநாடு, சென்னை, மற்றும் பிற பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் வரும் நிலையில் கரோனா வேகமாக பரவி வருகிறது; சமூக பரவலாக மாறும் சூழல் உள்ளதோ? என சுகாதாரத்துறையினர் பரவலாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
சின்னமுட்டத்தில் மீன்தொழிலாளிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளது. குளச்சலில் விசைப்படகுகளுக்கு தடைகாலம் என்றாலும் கரோனா அப்பகுதியில் பரவி வருவதால் நாட்டுப்படகுகள், பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. தூத்தூர் மீனவ கிராமத்தில் மட்டும் 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல் வள்ளவிளையில் 7 மீனவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மீனவ கிராமங்களில் கரோனா பரவி வருவதை தொடர்ந்து கடந்த இரு நாட்களாக குமரியில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு ªச்லவில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 340 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.