Published : 26 Jun 2020 03:59 PM
Last Updated : 26 Jun 2020 03:59 PM

கரோனாவால் வந்த திடீர் மாற்றம்; மருத்துவக் காப்பீடு எடுக்க ஆர்வம் காட்டும் மக்கள்!

இந்தியாவில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல் என அரசின் வழிகாட்டுதலோடு மக்களும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அதேசமயம் இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், மக்களிடம் மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாகர்கோவில் பறக்கையைச் சேர்ந்த காப்பீட்டு முகவர் ஈஸ்வர பிள்ளை நம்மிடம் பேசுகையில், “ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இரண்டுமே மனிதனின் இரு கண்களைப் போன்றது என அடிக்கடி நாங்கள் சொல்வோம். வளமான வாழ்வுக்கு பாலிசி முதிர்ச்சியடைந்ததும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் கைகொடுக்கும். அதேபோல் எதிர்பாராத மருத்துவச் செலவினங்களின்போது மருத்துவக் காப்பீடு தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

ஆனாலும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் தாண்டி பெரிய அளவில் நோய் எதுவும் இல்லாதவர்கள் மருத்துவக் காப்பீடுகள் பற்றி அக்கறையே செலுத்துவதில்லை. சர்க்கரையும், ரத்த அழுத்தமும் இருப்பவர்களுக்கு இதய நோய், சிறுநீரக நோய் உள்பட உள்ளுறுப்புகள் காலப்போக்கில் பாதிக்கப்படும் என்னும் புரிதல் பலருக்கு இருப்பதில்லை. வெகு சிலரே எதிர்கால நலன் கருதி மருத்துவக் காப்பீடு எடுக்கிறார்கள்.

கரோனா காலத்தில் மக்களுக்கு காப்பீட்டுத் திட்டங்கள் மீதான கவனம் அதிகமாகி இருக்கிறது. கரோனாவுக்கு முன்பு ஆயுள் காப்பீடுதான் உச்சத்தில் இருந்தது. ஆனால், இப்போது மருத்துவக் காப்பீடு முதலிடத்தைப் பிடித்துவிட்டது. கடந்த மாதத்தில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு நான் எடுத்துக் கொடுத்த ஆயுள் காப்பீட்டைவிட, மருத்துவக் காப்பீடு பாலிசிகள் இரண்டு மடங்கு அதிகம். இப்போது, கரோனாவுக்கு மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெற முடியுமா எனக்கேட்டு தினமும் அதிகமான அழைப்புகள் வருகின்றன. கரோனா பரவலின் தீவிரத்தால் மக்கள் மத்தியில் இயல்பாகவே இந்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

கரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியான சூழல் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழக்கமாக ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை 80 சதவீதம்பேர் உரிய நேரத்தில் கட்டி விடுகிறார்கள். சின்னச் சின்ன வேலை செய்வோர் கொஞ்சம் தாமதமாகக் கட்டுகிறார்கள். கட்டாமல் விட்டுவிட்டால் பாலிசி காலாவதியாகி விடும் என்ற விழிப்புணர்வைக் கொடுத்திருப்பதும் கரோனாதான்.

மருத்துவக் காப்பீட்டின் மூலம் கரோனாவுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து 4 லட்ச ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை பெற்றவர்களும் இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத கிருமியை வீழ்த்த அரசும், அதிகாரிகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் பங்கிற்குப் பொருளாதார ரீதியில் தாங்கிப் பிடிக்க இந்த கரோனா நேரத்திலும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வூட்டி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x