கரோனா பாதிப்பு; மருந்து, ஊசி இன்றி 40,000 பேரைக் குணப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
Updated on
1 min read

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மருந்து, ஊசி இன்றி 40 ஆயிரம் பேரைக் குணப்படுத்தியுள்ளோம் என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று (ஜூன் 26) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு செய்தார். பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி.ஜெயக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் , மருத்துவக் கல்லுாரி முதல்வர் குந்தவிதேவி மற்றும் மருத்துவர்கள், அரசு அதிகாரிகளோடு, மாவட்டத்தில் நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா வைரஸை நாம் துரத்திக் கொண்டிருக்கிறோம் என்ற நிலைப்பாட்டில் நாம் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவிலேயே பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளோம். உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வைரஸ் நோயை தமிழகத்தில் மட்டும் நேற்று (ஜூன் 25) வரை 40 ஆயிரம் பேரை எவ்வித மருந்தும் இல்லாமல், ஊசியும் இல்லாமல் குணப்படுத்தியுள்ளோம் .

இந்தியாவில் தமிழகத்தில் நாம் குறைந்த இறப்பு விகிதத்தைப் பராமரித்து வருகிறோம். விலை உயர்ந்த வீரியம்மிக்க மருந்துகளை தமிழ்நாடு மருத்துவ கார்ப்பரேஷன் மூலம் வரவழைக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ளோம், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஊசியை 30 பேருக்குச் செலுத்தி குணமடைந்து வருகின்றனர். போதிய அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

அதேபோன்று பிபிஇ, முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி தொடர்ந்து தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குக் கூடுதலாக மருத்துவர்கள், பணியாளர்கள், டெக்னீஷியன்கள் கேட்டதன்பேரில் நியமனம் செய்ய தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முதல்வர் தலைமையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்பு அடைந்தவர்களைக் குணப்படுத்தியும், பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் அவர்களைத் தனிமைப்படுத்தியும், நோய் எப்படி வந்தது எனக் கண்டறியும் பணியிலும் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in