

தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி நன்னகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அடுத்த சில நாட்களில் புளியங்குடியில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் அதிகமானோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களும் கரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து 2 மாதம் கழித்து கடந்த 6-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது. அடுத்த 13 நாட்களில் கடந்த 19-ம் தேதி கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 200-ஐ கடந்தது. இந்நிலையில், அடுத்த 7 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கையானது இன்று 300-ஐ கடந்துள்ளது.
இன்று புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் சென்னையில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், 3 பேர் மதுரையில் இருந்தும், ஒருவர் புதுச்சேரியில் இருந்தும் வந்தவர்கள். மற்றவர்கள் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.