

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையின் அத்துமீறல் அராஜகத்தால் இருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சிக்குரியது. காவல்துறை மனித உரிமைகளை மதிக்க வேண்டுமே தவிர, காலில் போட்டு மிதிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உரிய தண்டனைக்கு ஆளாகவேண்டும் என்று கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பென்னிக்ஸ் (வயது 31), கரோனா ஊரடங்கின்போது கடைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குமேல் திறந்திருந்தார்கள் என்பதற்காக அங்கே பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களைக் கைது செய்து, வழக்குப் போட்டு சிறையில் அடைத்ததோடு, வரம்பு மீறி, மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
அதிகார தன்முனைப்பு அவர்களை இப்படி ‘சாமியாடச் செய்வது’ அத்துறையின் கடமை உணர்வு, தன்னலமறந்து தொண்டு செய்வது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்போல ஆகி, அவ்விருவரும் - இளம் வயதுள்ள நிலையில், சிறைக்காவலில் மரணமடைந்தது, நாட்டிலே ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
தந்தையும், மகனும் ஒரே குடும்பத்தில் உயிரிழக்கும் வேதனை
சட்டத்தை மீறினால், சட்டப்படி என்ன தண்டனையோ, அதைத் தருவதை விட்டு, இப்படி அராஜகம், அருவருப்பு, அதீதமான அதிகார ஆணவத்துடன் மிருகத்தனமான தாக்குதல் நடத்தி, இரு உயிர்களை - தந்தையும், மகனும் ஒரே குடும்பத்தில் உயிரிழக்கும் வேதனையான - வெட்கப்படும் துன்பத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியது.
காவல்துறை அதிகாரிகளின் இத்தகைய போக்குகளை தொலைக்காட்சிகள் படமெடுத்துப் பரப்பியும்கூட, பயமோ கடமை உணர்வைக் கருத்தோடு செய்யும் மனோநிலையோ ஏனோ சில காவல்துறை அதிகாரிகளுக்கு வருவதில்லை.
கோவையில் ஒரு தாயின் முன்பு, அவரது மகனைப் போட்டு அடித்துத் தாக்கும் காட்சி, பார்த்த அனைவருக்கும் மன வலியை உண்டாக்கவே செய்தது
காவல்துறை மனித உரிமைகளை மதிக்க வேண்டும். ‘உங்கள் நண்பன்’ - காவல்துறை என்பது உண்மையிலேயே கடைப்பிடிக்கப்பட்டால் இப்படிப்பட்ட அவலங்கள் நடைபெறலாமா?
காவல்துறை மனித உரிமைகளை மதிக்க வேண்டும். காலில் போட்டு மிதிக்கக் கூடாது, கடைசியில் அவர்களது ஆணவத்திற்கும், அதீத நடவடிக்கைகளுக்கும் அதிகமான ‘‘விலை கொடுக்க’’ வேண்டியது வந்தே தீரும்.
சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை அமர்வு, இதனைத் தாமே முன்வந்து வழக்காக எடுத்துள்ளதை - விசாரணையை மேற்பார்வை பார்க்கும் என்று அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. காவல்துறை அதிகாரிகள் மீது உடனே வழக்குகள் பதிவு செய்யவேண்டும்; அப்போதுதான் அத்துறையின் மீது ஏற்பட்டுள்ள களங்கமும், கறையையும் துடைக்க வழியேற்படும்.
மனிதத் தன்மை எத்துறையிலும் ஆட்சி செய்யவேண்டும்
மனித உயிருடன் விளையாடக் கூடாது, மனித உரிமைகளை மதிக்கும் மனிதம் அத்துறையில் மட்டுமல்ல, எத்துறையிலும் ஆட்சி செய்யவேண்டும். அந்த இருவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு, தவறு செய்தவர்களைத் தண்டனையிலிருந்து தப்ப அனுமதிக்கக் கூடாது. காவல்துறை மீது மக்களுக்கு ஏற்படவேண்டியது விருப்பே தவிர, வெறுப்பு அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது”.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.