Published : 26 Jun 2020 02:14 PM
Last Updated : 26 Jun 2020 02:14 PM

நீதிமன்றப் பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களிடம் இ-பாஸ் கேட்கும் போலீஸார்: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்குப் பணிக்காகச் செல்லும்போது போலீஸார் தடுப்பதாகவும், இ-பாஸ் கேட்பதாகவும், இதனால் வழக்குகள் பாதிக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் கலையரசி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில் காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை அடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரைக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகள், மருத்துவம், ஊடகத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் நிறுவனம் சார்ந்த அடையாள அட்டை, இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் எனக் காவல்துறை அறிவித்தது.

வழக்குக்காக அலுவலகம் செல்லும், நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்களை அவர்களது அடையாள அட்டையைக் காண்பித்தால் அனுமதிக்கும்படி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஏற்கெனவே டிஜிபியிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர்களிடம் போலீஸார் இ-பாஸ் கேட்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

வழக்கறிஞர் அலுவலகத்திற்குப் பணிக்காகச் செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாகவும், இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவிப்பதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி , உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்பட்டாலும், ஆன்லைன் மூலம் நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில் டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணைப் பணிகளுக்காக வழக்கறிஞர்கள் அலுவலகம் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பதால், நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. ஆன்லைனில் வழக்குத் தாக்கல் செய்தாலும், கூடுதல் ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் நேரடியாக வழங்க வேண்டியுள்ளதால், அலுவல்ரீதியாகச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்குத் தொடர்பாக காவல்துறை விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x