

கரோனாவுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, பல்லவன் இல்லத்தில் இன்று (ஜூன் 26) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"ராயபுரம் மண்டலத்தின் 15 வார்டுகளில் இதுவரை 3,773 இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, 56 ஆயிரத்து 595 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுள் 6,814 நபர்களுக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னையில் ஒரே நாளில் 38 ஆயிரம் பரிசோதனைகள் செய்துள்ளோம். அமைச்சர்கள் குழு அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.
வெளியில் செல்லும்போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம்தான் உயிர்க்கவசம். மண்டலம் 5-க்கு உட்பட்ட குடிசைப்பகுதிகளில் 2 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா இன்னும் 2 ஆண்டுகள் கூட இருக்கலாம். முகக்கவசம் அணிவதை வாழ்வியல் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். அப்போதுதான் கரோனாவிலிருந்து தப்பித்து அதற்கு 'குட்-பை' சொல்ல முடியும்"
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அப்போது, கரோனா அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "எங்களுக்குப் பயம் என்றாலே என்னவென்று தெரியாது. மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து வேலைகளையும் செய்கிறோம். உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. நாங்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தோம்.
முன்னுதாரணமாக, உங்களுக்கு பிரச்சினை இருக்கக்கூடாது என்பதற்காக 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன். கே.பி.அன்பழகனுடன் என் மகனும் தொடர்பில் இருந்ததால் அவரும் தனிமைப்படுத்திக்கொண்டார். இருவரும் கரோனா பரிசோதனை செய்துகொண்டோம். முடிவில் 'நெகட்டிவ்' என வந்தது. கரோனாவுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை. உயிரைப் பொருட்படுத்தாதவர்கள் நாங்கள். எங்கள் நோக்கம் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதுதான்" என்றார்.
ஊரடங்கு நீட்டிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஊரடங்கு கொள்கை அடிப்படையில் எடுக்க வேண்டிய முடிவு. முதல்வர்தான் அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பார்" என்றார்.
சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் இருந்த தந்தை - மகன் உயிரிழந்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "காவல்துறை கனிவுடனும் அன்பாகவும் இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, காவல்துறையினர் நடந்துகொள்வர்" எனப் பதிலளித்தார்.