

சென்னையில் வசிக்கும் 28 லட்சம் குடிசைப் பகுதிகள், வருமானத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து சமுதாய கவனிப்பு திட்டம் மூலம் நோய்த்தொற்று தடுப்புப் பணியை முடுக்கி விட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:
“கோவிட்-19 சம்பந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், களப்பணிகள், நோயாளிகளைக் கையாளுவது குறித்த நிறைய பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக குடிசைப்பகுதிகளை மையமாக வைத்து சென்னையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு தொண்டு நிறுவனங்களை இணைத்து இந்தப் பணி நடந்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை குடிசைப்பகுதிகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகள், பிற்படுத்தப்பட்ட பகுதிகள் என ஏறக்குறைய 26லிருந்து 28 லட்சம் வரை மக்கள் வசிக்கிறார்கள். 28 லட்சம் மக்கள் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்குச் சிறப்பு கவனிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சமூக கவனிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்தச் சமூக கவனிப்பு திட்டத்தில் 1,979 இடங்களில் வசிக்கக்கூடிய பிற்பட்ட பகுதிகள், குடிசைப்பகுதிகளைக் குறிவைத்து எடுத்து 92 நிறுவனங்களோடு புரிந்துணர்வு போடப்பட்டு அவர்களுக்கு அந்தந்தப் பகுதிகள், மண்டலத்திற்குக் கீழே எந்தெந்தப் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் அங்கு வேலை செய்கிறார்கள்.
இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இதுபோன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, வாங்கும் திறன் குறைவாக இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு குறைவாக இருக்கும். இந்தப் பகுதிகளில் அம்மக்களுக்கு ஏற்றதுபோல் குறிவைத்துப் பணியாற்றுகிறோம். அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வை எடுத்துச் சொல்லி, முகக்கவசம் அணிவது, சமூக விலகல், கைகழுவுவது, வயதானவர்களை, நெடுநாள் நோயுடன் வசிக்கும் மக்களைக் கவனத்துடன் கையாளுவது, சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருந்தால் உடனடியாக சோதனைக்கு அணுகுவது போன்றவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் மூலம் நோய்த்தொற்றைத் தடுப்பதே இந்த சமூக கவனிப்பு திட்டத்தின் நோக்கம்.
இதனால் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. தென் சென்னையில் கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் தெற்கு வட்டார அலுவலர் மற்றும் அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இங்கு வசிக்கும் ஒரு லட்சம் மக்களை விழிப்புணர்வு ஊட்டியதால் நல்ல முடிவு கிடைத்துள்ளது. இங்குள்ள அவுட் ரீச் என தொண்டு நிறுவனத்தினர் பொதுமக்களைத் தினமும் சந்தித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நல்ல முடிவைத் தந்துள்ளது.
இதன் மூலம் குடிசைப்பகுதிகளில் சமுதாய ஆதரவு கிடைத்துள்ளது. இதை சென்னை மாநகராட்சி அலுவலர்கள், களப்பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து கொண்டு செல்கிறோம். இதைத் தொடர்ந்து கொண்டு செல்வதன் மூலம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்.
அண்ணா பல்கலைக்கழக கோவிட் பாதுகாப்பு மையத்தில் 1,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்தான் இதைக் கையாளப்போகிறார்கள். ஒருவாரத்தில் இது தயாராகிவிடும். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் என்னவென்றால் ஒரு நபருக்குத் தொற்று வந்தால் அவரது குடும்ப உறுப்பினரைச் சோதிக்க வேண்டும். அதுவல்லாமல் நெருக்கமான தொடர்பு என்ற வகையில் ஒரு விசாரணை முறை உள்ளது, ஒரு தொற்று ஏற்பட்ட நபருடன் ஒரு நபர் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார், பழகுகிறார் என்றால் அவரைச் சோதிக்க வேண்டும்.
இதை வைத்து சென்னையில் தினசரி 10 ஆயிரம் சோதனைகள் செய்கிறோம். சோதனை எடுத்த உடன் அவரைத் தனிமைப்படுத்திவிடுகிறோம். காரணம் ஒரு நபருக்குச் சோதனை நடத்திய பின்னர் அவருக்குத் தொற்று வரலாம். ஆகவே 14 நாள் தனிமைப்படுத்தி வருகிறோம். வெளியூர் வெளிநாடுகளிலிருந்து வந்தவரைத் தனிமைப்படுத்துகிறோம். இதன் மூலம் பரவுதலைத் தடுக்கிறோம்.
ஒருவாரம் முன்னர் மாநகராட்சி சார்பில் 5500 பரிசோதனைகள் செய்தோம். தற்போது 10 ஆயிரம் சோதனைகள் நடத்துகிறோம். முன்னர் ஒரு நபருக்கு தொற்று வந்தால் ஒரு தெருவையே தனிமைப்படுத்துவோம், தற்போது வீடுகளைக் குறி வைத்து மட்டுமே தனிமைப்படுத்திக் கண்காணிக்கிறோம்.
கோவிட் சிகிச்சை மையத்தைப் பொறுத்தவரை 54 மையங்களில் 17,500 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள் கண்காணிக்கும் வகையில் அவர்களிடம் 11,500 படுக்கைகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் 4,500 பேர்தான் சிகிச்சையில் இருக்கின்றனர். நேற்று 450 பேர் இம்மையங்களில் அனுமதித்தோம். ஆனால் டிஸ்சார்ஜ் ஆகிப்போனது 420 பேர். ஆகவே இது சம நிலையாக உள்ளது. ஆனாலும் இன்னும் பல இடங்கள் தயாராகி வருகின்றன.
தேவையான படுக்கைகளைத் தயார் செய்து வைத்துக்கொள்கிறோம். நோயாளிகள் வராமல் இருந்தாலும் பரவாயில்லை, ஆனாலும் தயார் நிலையில் வைத்துள்ளோம். மாநகராட்சி சார்பில் இதுபோன்ற மையங்களைத் தயார் செய்வது, உணவு போன்றவற்றை நாங்கள் கொடுத்துவிடுவோம். ஆக்ஸிஜன், மருத்துவ சிகிச்சை போன்றவை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
ஊரடங்கின் எச்சரிக்கையை உணர்த்துவதற்காகவும், மக்கள் கட்டுகோப்பாக இருப்பதை வலியுறுத்துவதற்காகவும் காவல்துறை சார்பில் கமாண்டோ அணிவகுப்பு நடந்தது. 95 சதவீதத்தினர் கட்டுக்கோப்பாக இருப்பார்கள். 5 சதவீதத்தினர் ஒழுங்கில்லாமல் இருப்பார்கள். அதைச் சரிசெய்ய கட்டுக்கோப்பாக இருக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த ஏற்பாடுகள்.
அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் சரக்கு வாகனங்கள் மற்ற அத்தியாவசிய நடவடிக்கைகள் எதையும் தடுப்பதில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் முக்கியமாகக் கூடுதலாக கவனிக்கும் நிலையில் நடவடிக்கை இருக்கும்.
குடிசைப் பகுதிகளை மேப் மாதிரி வரைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தண்ணீர் பிடிக்கும் இடம், மளிகைக்கடை இருக்கும் இடங்களைக் குறிவைத்து பிரச்சாரம் செய்வது, நாடகம் நடத்துவது அவர்களுடன் பேசுவது போன்றவற்றைத் தொண்டு நிறுவனங்கள் செய்கிறார்கள்.
600, 700 பேர் வரை அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிந்துவந்தோம். தற்போது 3,500 பேர் வரை தினசரி அறிகுறி உள்ளவர்களைக் கண்டறிகிறோம். இதன் மூலம் நோய்த்தொற்று உள்ளவர்களா என சோதனை செய்வோம். அது மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு. இந்த முழு ஊரடங்கு காரணமாக 90 சதவீத மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒருவேளை அதிக அளவான மக்கள் நோய்த்தொற்றுடன் இருந்தாலும் இதன் மூலம் பரவல் தடுக்கப்படுகிறது.
இதன் மூலம் தொற்றுள்ளவர்கள் வெளியே வராமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் அவர்களுக்குள்ளேயே அது சரியாகும், ஒருவேளை அவர் மூலம் அவரது குடும்பத்தாருக்கு பரவினாலும் தற்போது நாங்கள் செய்யும் இந்த சோதனை மூலம் அவர்களைக் கண்டறிகிறோம். இது ஒரு நல்ல நிகழ்வாக உள்ளது”.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.