Published : 26 Jun 2020 11:39 AM
Last Updated : 26 Jun 2020 11:39 AM

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு: குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி; ஸ்டாலின் அறிவிப்பு

சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த தந்தை - மகனின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) வெளியிட்ட அறிவிப்பு:

"கரோனாவைவிடக் கொடூரமான முறையில் தமிழகக் காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்தப் பெருங்கொடூரம்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையையும் மகனையும் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியும், லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்தும், நெஞ்சுப்பகுதியில் உள்ள முடிகளைப் பிய்த்தெறிந்து மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தப்படுத்தி உயிர் பறிக்கப்பட்டிருப்பதை பென்னிக்ஸின் தாயும் - சகோதரியும் வேதனையோடும் கண்ணீரோடும் சொல்வதைக் கண்டு தமிழகமே பதறுகிறது.

இறந்த இருவரின் உடலில் காயங்கள் நிறைந்திருப்பதை மருத்துவக் குறிப்புகளிலும் உறுதி செய்துள்ள நிலையில், உடல் கூறாய்வு அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதத்தன்மையற்ற இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட துணைநின்ற அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நீதிக்கான போராட்டத்தை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வலிமையுடன் தொடர வேண்டியுள்ள நிலையில், சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்ற உறுதியினை அளிக்கிறேன்.

கணவன் - மகன் என அன்பான இரண்டு உயிர்களைப் பறிகொடுத்து, மூன்று பெண் பிள்ளைகளின் கண்ணீருக்குப் பதில் சொல்ல முடியாமல் வேதனைத் தீயில் வெந்துகொண்டிருக்கும் செல்வராணிக்கு திமுகவின் சார்பில் ஆறுதலினைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்தம் குடும்பத்திற்கு, திமுகவின் சார்பில் 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x