காவல்துறை - சிறைத்துறை அதிகாரிகள், கைதிகளுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை; தமிழக அரசு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க காவல் துறை அதிகாரிகள், சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி தாக்கல் செய்த பொது நல மனுவில், "கரோனா பரவலை தடுக்கும் பணிகளில் முன்னணியில் இருந்து இரவு பகலாக பணியாற்றும் காவல் துறையினருக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை. கரோனா பாதிப்புக்குள்ளாகும் காவல் துறை மற்றும் சிறைத்துறையினரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 19 கைதிகளில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புழல் சிறையில் கரோனா தொற்று தாக்கம் இருப்பது உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அங்கு இதுநாள் வரை அங்குள்ள கைதிகளுக்கு சோதனைகளும் நடத்தப்படவில்லை, தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

அதனால் காவல்துறையினர், சிறைத்துறையினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு முறையாக பரிசோதனை நடத்த வேண்டும் எனவும், அவர்களுக்கு தேவையான முழு உடல் கவசம், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வந்தபோது, சிறைத்துறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகளுக்கு ஏற்கெனவே முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுசம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in